கொரோனா 2வது அலைக்கு பிரதமர் மோடியே காரணம்.. எச்சரித்தும் விழிக்கவில்லை.. ராகுல் காந்தி விளாசல்..!

By vinoth kumarFirst Published May 28, 2021, 3:36 PM IST
Highlights

கொரோனாவின் 2வது அலையால் ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் பிரதமர் மோடியே காரணம். கொரோனா பற்றி மோடி புரிந்து கொள்ளவில்லை. இறப்புகள் குறித்து மத்திய அரசு பொய் சொல்கிறது. 

கொரோனா தடுப்பூசி திட்டத்தை சரியான உத்திகளுடன் செயல்படுத்தாவிடில் இன்னும் பல அலைகள் தாக்கும் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி கூறியுள்ளார். 

காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்குபேட்டியளித்த ராகுல் காந்தி;- கோவிட் தொற்று என்றால் என்ன என மத்திய அரசுக்கு புரியவில்லை. கோவிட் குறித்து புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. கோவிட் 2வது அலை தாக்கும் என ஏற்கெனவே எச்சரிக்கை செய்தேன். ஆனால், அதனை மத்திய அரசு ஏளனம் செய்தது. வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்கிறது.

கொரோனாவின் 2வது அலையால் ஏற்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் பிரதமர் மோடியே காரணம். கொரோனா பற்றி மோடி புரிந்து கொள்ளவில்லை. இறப்புகள் குறித்து மத்திய அரசு பொய் சொல்கிறது. மரண விகிதம் குறித்து மத்திய அரசு பொய்யான தகவலை அளிக்கிறது. உயிரிழப்பு குறித்து தவறான விவரத்தை அளிக்கும் மத்திய அரசு, பேரழிவுக்கான கதவுகளை திறந்துவிட்டு உள்ளது. 

கோவிட்டை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், 97 சதவீதம் பேருக்கு இன்றும் தடுப்பூசி போட வேண்டும். மத்திய அரசிடம் தடுப்பூசி போடுவதற்கான எந்த திட்டமும் இல்லை. தடுப்பூசிகளின் தலைநகரமாக இந்தியா இருந்தும் நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். உலகளவில், அதிகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டும், குறைந்தளவு பேருக்கே செலுத்தப்பட்டு உள்ளது. 3 சதவீதம் பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டத்தை மத்திய அரசு செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை சரியான உத்திகளுடன்  செயல்படுத்தாவிடில் பல அலைகள் தாக்கும். தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

click me!