அதிமுக ஆட்சியில் பந்தாடினார்கள்.. ரஜினி கட்சிக்கு முதல்வர் வேட்பாளர்.. பிரசாரத்தில் மனம் திறந்த சகாயம் ஐஏஎஸ்.!

By Asianet TamilFirst Published Mar 27, 2021, 9:35 PM IST
Highlights

கடந்த 7 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நான் பந்தாடப்பட்டேன். வட்டாட்சியருக்குரிய அதிகாரம் இல்லாத பணியில் என்னை 7 ஆண்டுகள் நியமித்தார்கள் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
 

மதுரை மேற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவை உண்மையாக எதிர்க்கிற ஏ டீம் நாங்கள்தான். எங்களை பாஜகவின் பி டீம் என்பது ஆதாரமற்றது. பொதுமக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவை இறுதிவரை எதிர்ப்போம். நாங்கள் பாஜக ஆதரவாளர்கள் என்று நிரூபித்தால், பொதுவாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறோம். கிறிஸ்தவ கைக்கூலி என்ற விமர்சனமும் அருவருப்பானது. ஒரு மதத்தில் பிறந்தவன் என்பதற்காக என்னை இப்படி இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது.
நாங்கள் திமுக-அதிமுகவை சம அளவிலேயே எதிர்க்கிறோம். குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நான் பந்தாடப்பட்டேன். வட்டாட்சியருக்குரிய அதிகாரம் இல்லாத பணியில் என்னை 7 ஆண்டுகள் நியமித்தார்கள். அரசியலில் இறங்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருந்ததில்லை. நடிகர் ரஜினி என்னை சந்திக்க விரும்புவதாக சிலர் அழைப்பு விடுத்தனர். அவரது கட்சியில் என்னை முதல்வர் வேட்பாளராக பங்கேற்க அழைப்பு விடுத்தபோதும், ரஜினி பாஜகவுக்கு ஆதரவாளர் என்ற செய்தியின் அடிப்படையில் அவருடனான சந்திப்பை தவிர்த்தேன்.


தற்போது கால அவகாசம் குறைவாக இருந்ததாலேயே 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம். போட்டியிடும் இளைஞர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டேன். நேர்மையான அரசியலை தரவே களத்தில் இறங்கியுள்ளோம்.” என்று சகாயம் தெரிவித்தார். 

click me!