உடல் சோர்வு, அயர்வு... துரைமுருகனுடன் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு என்னாச்சு..?

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2021, 12:32 PM IST
Highlights

தலைவர் மு.க.ஸ்டாலினை துரைமுருகன் நேற்று சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனக்கு உடல் சோர்வாகவும், அயர்வாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கடந்த சில மாதங்களாக அனல் பறக்க நடந்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவத் தொடங்கியது. பிரச்சாரங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் கூட்டம் கூட்டமாக பங்கேற்ற மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை காற்றில் பறக்கவிட்டனர். மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் சுற்றித் திரிந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க வழி வகுத்தது.

தேர்தல் சமயத்தில் களம் காணும் வேட்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அந்த வகையில், திமுக எம்.பி கனிமொழியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பிபிஇ கிட் அணிந்து வந்து நேற்று முன்தினம் தேர்தலில் வாக்களித்தார். கொரோனா பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்து விட்டதாகவும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. துரைமுருகன் தன்னை தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோன உறுதியான துரைமுருகன் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பு செலுத்திக் கொண்டவர்.  கட்சியில் சீனியரான துரைமுருகன் அவ்வப்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார். இந்நிலையில் கொரோனா அவரை தாக்கியதால் திமுகவினர் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 தலைவர் மு.க.ஸ்டாலினை துரைமுருகன் நேற்று சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனக்கு உடல் சோர்வாகவும், அயர்வாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் திமுக தலைவர் ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லையென்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும் துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த மற்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, பெருந்துறை வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோருக்கு கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது.

click me!