
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனயில் சசிகலா “ஜேம்ஸ் பாண்டு கோட்டுடன்” சுற்றி வந்தார் என பி.எச்.பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
செப்டம்பர் 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும், ஏராளமான தொண்டர்கள், அங்கே திரண்டனர். கடைசி வரை அங்கேயே இருந்தனர்.
டிசம்பர் 5ம் தேதி, ஜெயலலிதாவுக்கு “கார்டியா அரெஸ்ட்” ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இதை அறிந்ததும், அனைவரும் பதறி துடித்தோம். மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரித்தோம். ஆனால் சசிகலா, எதுவுமே நடக்காதது போல் “ஜேம்ஸ் பாண்டு கோட்டுடன்” சுற்றி வந்தார்.
சசிகலாவுடன், அவரது உறவினர்களும் சூழ்ந்து இருந்தனர். இதை நான் மட்டுமல்ல அனைவருமே பார்த்தோம். ஆனால், அவரது கண்ணில் ஒரு துளி கண்ணீர் வரவில்லை.
அப்போது, எங்களிடம் அவர்கள், ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு ஏற்படவில்லை. உடனடியாக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்து, உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிவிடலாம் என எங்களுக்கு சமாதானம் செய்தனர். இதனால், எங்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தது.
ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என அறிவித்துவிட்டனர். இதை கேட்டதும், நாங்கள் பதறியடித்து கொண்டு ஐசியு வார்டுக்கு சென்றோம். ஆனால், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு எங்களை அனுமதிக்கவில்லை.
அதே நேரத்தில் அதிகாரிகள், போலீசார், நர்சுகள் அனைவரும் ஜெயல்லிதாவின் உடலை பார்த்து கொண்டு இருந்தனா. இதனால் நாங்கள், உளவுத்துறை எஸ்பியிடம், அம்மாவை பார்க்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அவர் மறுத்து, எங்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.
ஆனால், நான் பிடிவாதமாக அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். இதையடுத்து அவர், ஜெயலலிதா உடலை பார்க்க அனுமதித்தார். அதற்குள், அங்கு வந்த ஒரு அதிகாரி, ஜெயலலிதா உடலை எம்பால்மிங் செய்ய 4 மணி நேரம் ஆகும். அனைவரும் வெளியே செல்லுங்கள் என்றார். அதனை நாங்கள் ஏற்கவில்லை. எங்கும் செல்லாமல் அங்கேய காத்துகிடந்தோம்.
சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு, ஜெயலலிதாவின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. உடனே, அவசர அவசரமாக உடலை லிப்டில் ஏற்றி, அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். அதன்பின், சுமார் 3 மணி நேரத்துக்கு பின், ராஜாஜி அரங்கில், பொதுமக்கள் அஞ்சலிக்க வைத்தபோதுதான் பார்த்தோம்.
அங்கு உடலை பார்த்ததும், கடும் அதிர்ச்சி அடைந்தோம். ஜெயலலிதாவால் கட்சியை விட்டு விரட்டப்பட்ட சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவின் உடலை சுற்றி நிற்பதை கண்டு வேதனை அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.