
சசிகலாவை அதிமுக பொது செயலாளராக தேர்ந்தெடுக்க, செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் மிரட்டி கையெழுத்து கேட்டனர் என பரபரப்பு புகார் கூறியுள்ளார் எழும்பூர் பகுதி செயலாளர் மகிழன்பன். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ காட்சிகள், வாட்ஸ்அப் மூலம் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் கூறியிருப்பதாவது:-
வணக்கம் என் பெயர் மகிழன்பன். சென்னை எழும்பூர் பகுதி அதிமுக செயலாளராக இருக்கிறேன்.
விதிகள் மீறப்படும்போது, ஒரு பெரிய இயக்கம், அகில இந்திய அளவிலே பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கம். நிரந்தரமான ஒரு சின்னத்தை பெற்ற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கம், விதிமீறல்களால், பாதிக்கப்படும்போது, அதில் யாருக்கெல்லாம் ஆதங்கம் இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக தேர்தல் கமிஷனுக்கு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம்.
முடிவெடுப்பது தேர்தல் கமிஷனர். ஆனால், சொல்ல வேண்டியது பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் கடமை. நான், புகார் அனுப்பி இருக்கிறேன் தேர்தல் கமிஷனுக்கு. இந்திய தேர்தல் கமிஷனுக்கு நான் புகார் அனுப்பி இருக்கிறேன்.
பொது செயலாளர் இறந்துவிட்டார். அதன்பிறகு 29ம் தேதி, மாவட்ட செயலாளர் என்னை பார்க்க வேண்டும் என கூப்பிட்டார். நான் அங்கு சென்றது, அவர் என்ன சொன்னார் என்றால், பூந்தமல்லி ஐரோட்டில் ஒரு இடத்தில் சந்தித்தோம்.
அங்கு ஒரு வேனில் எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள். என்னையும் கூப்பிட்டார். எனக்கு நெருங்கிய நண்பர் அவர். அதனால், நானும் சென்று, அந்த வண்டியில் உட்கார்ந்து கொண்டேன். உடனே அந்த வேன், நேராக வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்துக்கு சென்றது.
எங்கு 2 பேர் துப்பாக்கியுடன் கூடிய செக்யூரிட்டி இருந்தார்கள். எங்களுக்காகவே இருந்தார்கள். உள்ளே எங்களை அழைத்து சென்று, கையெழுத்து போடும் வரை அவர்கள் ஒதுங்கவில்லை. அங்குள்ள அட்டன்டென்சில் நாங்கள் கையெழுத்து போட்டவுடன், அங்கிருந்து பொதுக்குழு அறைக்கு அழைத்து சென்று உட்கார வைத்தனர்.
அந்த அறையில் உட்கார வைக்கப்பட்ட நாங்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஆனது. எங்களை உள்ளேயே வைத்து பூட்டு போட்டது போல் வைத்தனர். கூட்டம் முடிந்தவுடன், மீண்டும் அதேபோல் செக்யூரிட்டிகள் துப்பாக்கியுடன் வந்து எங்களை வேனில் ஏற்றி உட்கார வைத்தனர். மீண்டும் எங்கிருந்து புறப்பட்டோமோ அதே இடத்துக்கு அந்த வேன் வந்து சேர்ந்தது.
இடையில் எங்களுக்கு ஒரு இன்ஸ்டெரக்ஷ்ன், இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று. நான் பலரிடம் பேசி இருக்கிறேன். பலரிடம் பேசும்போது, அவர்கள் சசிகலாவை ஒட்டுமொத்தமாக ஏற்று கொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் சொல்கிறேன்.
அடிமட்ட உறுப்பினர்கள் யாரும், அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். பொதுக்குழு உறுப்பினர்களை பொருத்தவரை, சசிகலாவை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏதோ ஒரு சூழ்நிலையில் கட்சி உடைய கூடாது. இரட்டை இலை சின்னம் போக கூடாது . இப்படி ஒரு இமேஜை கிரியேட் செய்து, அவர்களை நிறுத்தி வைக்கிறார்கள். மற்றபடி யாருக்கும், சசிகலா பொது செயலாளர் ஆவதில் திருப்தி இல்லை. அதுதான் உண்மை.
அதாவது சசிகலாவை, முன்மொழிந்ததாகவே, வழி மொழிந்ததாவோ, ஓட்டு போட்டதாகவோ, கையெழுத்து பேட்டதாகவோ இல்லை. பொதுக்குழுவில் மட்டும் கலந்து கொண்டோம். அவ்வளவுதான். அந்த பொதுக்குழு, செயற்குழுவில் கலந்து கொண்டதற்கு, ஒரு கையெழுத்து வாங்குகிறார்கள்.
நாங்கள் யாரும், அவர் பொது செயலாளராக வருவதற்கு முன்மொழிகிறோம், வழிமொழிகிறோம் என சொல்லவில்லை. இதை வெளியே சொல்ல கூடாது என எங்களை மிரட்டி அழைத்து சென்று, ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.