
பாஜகவின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் பெட்ரோல் விலை வெறும் 9 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் பாஜ தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா புள்ளி விபர கணக்குகளை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன .
ஆனால் இந்த நடைமுறையை மாற்றி பெட்ரோல்,டீசல் விலையை நாள் தோறும் நிர்ணயிக்கும் முறை பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பெட்ரோல்,டீசல் விலை உச்சத்தை தொட்டது.
கடந்த நான்கு நாட்களாக பெட்ரேோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக நேற்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தலா 9 பைசா குறைந்துள்ளது.
இதையடுத்து ட்விட்டரில் #CutFuelTaxes என்பது ட்ரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக் மூலம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தி ஏராளமான பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா எரிபொருட்கள் மீதான வரியைக் குறைக்க வலியுறுத்துவதற்கு பதிலளித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.33 ஆக இருந்தது.
2014ஆம் ஆண்டில் அவர்கள் ஆட்சியை இழந்தபோது பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.74. 10 ஆனது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை 40 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆனால், இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83 ரூபாய் மட்டும்தான். அதாவது பாஜக ஆட்சியில் இருக்கும் கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது என சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
அவனவன் பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டிருச்சு என புலம்பிக் கொண்டிருக்கும்போது இந்த ராஜா கொடுத்துள்ள டீடெயில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.