கச்சா எண்ணெய் விலை குறையும் போது.. எரிபொருட்களின் விலையை குறைப்பது தானே நியாயம்.. கடுப்பாகும் ராமதாஸ்.!

By vinoth kumar  |  First Published Nov 3, 2022, 1:49 PM IST

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும் போது எரிபொருட்களின் விலையை குறைப்பது தான் நியாயம். 


விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எரிபொருள் விலையை குறைக்காமல் மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எரிபொருள் விலையை குறைக்காமல் மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. விமானங்களுக்கான எரிபொருள் விலையும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைகளும், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தின. கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும் போது எரிபொருட்களின் விலையை குறைப்பது தான் நியாயம். ஆனால், லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்ட எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு தயாராக இல்லை. 

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஜூன் மாதத்தில் பீப்பாய்க்கு 116 டாலராக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இது தான் அதிகபட்ச விலை ஆகும். அதன்பின்னர் குறையத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 90 டாலர் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.  இது சுமார் 22% வீழ்ச்சி ஆகும். அதன் பயனாக இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 6 கூடுதல் லாபம் கிடைக்கிறது. டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வில்லை என்றாலும், இழப்பு பெருமளவில் குறைந்து விட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய நிறுவனங்கள், அதை தாங்களே அனுபவிப்பது நியாயமற்றது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் மக்கள் பாதிப்பை குறைக்கும் வகையில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன என்பது உண்மை தான்.  ஆனால், ஜூலை மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையத் தொடங்கிய நிலையில், ஏப்ரல், ஜூன், ஜுலை மாதங்களில்  ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை. அதன்மூலம் கிடைத்த லாபத்தால் முந்தைய மாதங்களில் ஏற்பட்ட இழப்பும் ஈடுகட்டப்பட்டு விட்டது. எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை மக்களுக்கு வழங்கும் நோக்குடன், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் லிட்டருக்கு 40 காசுகள் குறைப்பதன் மூலம் 5 நாட்களில் லிட்டருக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அந்த முடிவை எண்ணெய் நிறுவனங்கள் கைவிட்டு விட்டன. அதற்கான காரணம் என்ன? என்பது இதுவரை விளக்கப்படவில்லை.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக சமையல் எரிவாயு உற்பத்திச் செலவும் பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய்  நிறுவனங்கள் கடந்த  6 மாதங்களில் ரூ.615 குறைத்துள்ளன. ஆனால், வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. மாறாக, மே & ஜுலை காலத்தில் இந்த வகை சமையல் எரிவாயு விலை ரூ.103 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேச சந்தையில் இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது; டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது. சமையல் எரிவாயு விற்பனையில்  எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22,000 கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்து விட்ட நிலையில், இப்போது எரிவாயு விற்பனையில் ஓரளவு லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

ஒட்டுமொத்தமாக  எரிபொருள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் நிலையில் அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் துயரத்தைப் போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!