
தந்தை பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தயார் பதில் சொல்வது சரியானதல்ல என்றும் எச்சரித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு என்பது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரியார், அம்பேத்கர் சிலைகள் எப்படி தாக்கப்பட்டதோ அதே போன்ற நிலை திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அம்பேத்கர் பெரியார் சிலைகள் தாக்கப்படுவது இனி இருக்காது என்றும், அப்படித் தாக்குவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இது பெரியார் ஆட்சி, அம்பேத்கர் ஆட்சி என்றும் திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர் ஆனால் நேற்று இரவு பொன்னேரியில் உள்ள தந்தை பெரியார் சிலை சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆட்சியின் போது பெரியார் அம்பேத்கர் சிலைகளை தாக்கியவர்கள் மானம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறுவது வழக்கமான பதிலாக போலீசார் வைத்துள்ளனர். இந்த ஆட்சியிலும் அதுபோன்ற ஒரு பதில் சொல்வது கூடாது என கி.வீரமணி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
நேற்று பொன்னேரியில் உள்ள தந்தை பெரியார் சிலையை கோழைத்தனமாக காலிகள் சேதப்படுத்தியுள்ளது. நேற்று காலை சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் உள்ள அன்னை ஈவேரா மணியம்மையார் அவர்களின் சிலைக்கு புடவை மூலம் முக்காடு போடப்பட்டுள்ளது. கேட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர் இதைச் செய்திருக்கிறார் என்ற பதிலை எப்பொழுதும் தயாராக (ரெடிமேடாக) காவல்துறையினர் கூறிவிடுகிறார்கள். வேதாரண்யம் அருகே தோத்தார குடியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட போதும், தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையின் தலையில் செருப்பை வைத்த போதும், சென்னை அண்ணா சிலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட போதும் கூட மனநலம் சரியில்லாத ஆசாமி செய்ததாகக் கூறி கோப்பை முடித்து விடுவதே வாடிக்கையாகிவிட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பெரியார் சிலை தான் கண்ணுக்குத் தெரியும் போல் தெரிகிறது. பொன்னேரியில் நேற்று காலை முதல் இரவு வரை பிஜேபியின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்பதையும், தந்தை பெரியார் சிலை அருகே வெற்றிவேல் வீரவேல் என்று எழுதப்பட்ட நோட்டீசும் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையினர் கணக்கில் கொள்ளவேண்டும். கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இத்தகையவர்களை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதுதான் முக்கியம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல் பாடுகளால் தந்தை பெரியாரை இழிவுபடுத்தலாம் என்ற அற்ப சந்தோஷப்படும் கயவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளிலேயே செருப்பு வீச்சுக்கள், கல்லெறிதல் போன்றவைகளெல்லாம் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் சந்தித்த சரித்திர நாயகன் தான் தந்தை பெரியார். எதிரிகளின், துரோகிகளின் இத்தகைய அருவருப்பான நடவடிக்கைகள் தந்தை பெரியாரின் பொது வாழ்வுக்கு இடப்பட்ட உரமாகத்தான் வெற்றி நடைபோட்டு அய்யா மறைந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகம் முழுவதும் போற்றப்படும் அவர்தம் மண்டைச் சுரப்பை உலகு தொழும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறார்.
அதே நேரத்தில் தந்தை பெரியார் சிலைகளை குறிவைத்து தாக்கும் விஷமிகள், விஷமிகளின் பின்னணியில் இருக்கக்கூடியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரை கேட்டுக்கொள்கிறோம். முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். எல்லா தலைவர்கள் சிலைக்கு அருகிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கூண்டுகளை அகற்றுவது அவசியம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:- தலைவர்கள் சிலைக்கு கூண்டு போடுதல் அறிவார்ந்த தடுப்பு செயலாகவும் இருக்கமுடியாது, கும்மிடிபூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் ஊர்வலமாக சென்று ஆட்சியரை சந்தித்து தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். கழகத்தின் அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.