ஒருபுறம் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு!! மறுபுறம் புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு

First Published Mar 20, 2018, 10:33 AM IST
Highlights
periyar statue damaged in pudukottai


விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் மற்றுமொரு பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாஜக வீழ்த்தியுள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சி அமைய உள்ள நிலையில், அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை ஒன்று இடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளை அடுத்து, அதற்கு எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்தனர். இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதுக்கோட்டையில் மற்றுமொரு பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கடந்த 2003ம் ஆண்டு பெரியார் சிலையுடன் படிப்பகமும் அமைக்கப்பட்டது. இந்த பெரியார் சிலையை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். பெரியார் சிலையிலிருந்து தலையை துண்டாக உடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!