பேரறிவாளனுக்கு 7 வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

By manimegalai aFirst Published Nov 24, 2021, 9:58 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதம் காலம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைச் சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி ,முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல்வேறும் அமைப்புகளும் , அரசியல் கட்சிகளிலும் குரல் கொடுத்து வருகின்றன. கடந்த மே மாதம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

 இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. உடனே பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையிலிருந்து ஜோலார்ப்பேட்டையிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், வீட்டில் இருந்தப்படியே மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.

 ஒரு மாதகாலம் பரோல் முடித்து கடந்த ஜூன் மாதம் சிறைக்கு செல்லவிருந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் காலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல் ஜூலை , ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்,நவம்பர் என தொடர்ந்து 6 முறை தமிழக அரசு பேரறிவாளனின் பரோலை நீட்டித்து வந்தது.

இந்நிலையில் தற்போது எழாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை காரணமாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் உடல்நிலை கருத்தில் கொண்டு அவரது பரோலை நீட்டித்த தமிழக அரசுக்கு தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவரது பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வரும் காவல்துறையினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட காவல்துறையினர் செய்துதர வேண்டும் எனும் கோரிக்கையைப் பணியில் ஈடுப்பட்டு வரும் காவலர்கள் வைத்துள்ளனர்.

முன்னதாக கடந்த மே 19 அவருக்கு விடுப்பு கொடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதன் பிறகு பலமுறை பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

click me!