இந்த ஓராண்டில் நீங்கள் யாரென்று மக்கள் புரிஞ்சிகிட்டாங்க.. மீண்டும் அதிமுக ஆட்சிதான்..மார்தட்டும் ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published May 7, 2022, 11:51 AM IST
Highlights

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்தும், அவர்கள் தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்தும், அவர்கள் தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதியும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெரும்பாலானோர் இந்த வாக்குறுதியை நம்பித்தான் திமுகவிற்கு வாக்களித்தார்கள். தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமை தொகை என்று குறிப்பிட்டுவிட்டு நிதிநிலை அறிக்கையில் இது ஏழ்மையானவர்களுக்கான திட்டம் என்று திமுக அரசு கூறுகிறது. இதன் மூலம் மொத்த மக்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான மகளிருக்கு அளித்துவிட்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது என கூறிக்கொள்ள போகிறது திமுக.

இது ஒரு விதமான ஏமாற்று வேலை. இதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதியை திமுக அறிவித்தது. எரிவாயுவை வீடுதோறும் வழங்கும் பணியை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணியில் மாநில அரசு மானியம் வழங்குவது என்பது சாத்தியமற்ற செயல், அவ்வாறு கொடுக்க வேண்டுமென்றால் தமிழ்நாடு எரிபொருள் இணைப்பு வைத்துள்ள அனைவருக்குமான மானியத்தை முன்கூட்டிய மாநில அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும், அதை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான். இந்த வாக்குறுதிகள் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட ஒன்று. 

இதேபோல் மக்கள் நம்பி வாக்களித்த முக்கிய வாக்குறுதிகளாக நியாய விலை கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம்பருப்பு முதியோர் ஓய்வூதியம் 1500 ரூபாய், 7 பேர் விடுதலை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணி ஓய்வு திட்டம் என ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் இதுவரை இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றலாம் என்று திமுக அரசு நினைக்கிறது, ஆனால் இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. கொடுத்த வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றவில்லை என்றால் சுதந்திரமான, நியாயமான நீதி தவறாத ஆட்சி நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திமுக கவுன்சிலர்களால் மக்கள் படும் துன்பங்களை சொல்லி மாளாது.

நீட் தேர்வு ரத்து பிரச்சனையில் ஆளுநரை எதிர்க்கும் திமுக அரசு வரி பகிர்வு விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கும் திமுக அரசு, முல்லைப் பெரியாறு விஷயத்தில் பல்வேறு இடையூறுகளை தமிழ்நாட்டுக்கு அளித்துக் கொண்டிருக்கிற கேரளஅரசை எதிர்க்கவோ, மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவோ தயக்கம் காட்டுவது வியப்பாக இருக்கிறது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போல, மொத்தத்தில் மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் என்பதற்கேற்ப அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். 
 

click me!