‘தேர்தல் வாக்குறுதி படிவத்தில் கையெழுத்து கேட்ட பொதுமக்கள்’ – அலறி அடித்து ஓடிய செந்தில் பாலாஜி...!!!!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 02:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
‘தேர்தல் வாக்குறுதி படிவத்தில் கையெழுத்து கேட்ட பொதுமக்கள்’ – அலறி அடித்து ஓடிய செந்தில் பாலாஜி...!!!!

சுருக்கம்

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது உறுதிமொழி கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் நவம்பர்19-ல் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், புகழூரில் நேற்று செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் ஓட்டு கேட்க வந்தார். அப்போது, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கததை சேர்ந்தவர்கள் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை வழிமறித்து,

கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரத்தின்போது, நீங்கள் அளித்த வாக்குறுதிகளை  நாங்கள் உறுதிமொழியாக எழுதி கொண்டு வந்துள்ளோம். இதில் கையெழுத்து போடுங்கள் என கூறி அந்த உறுதிமொழி படிவத்தை கொடுத்தனர்.

இதை படித்து பார்த்த செந்திபாலாஜி உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாமல் சென்றுவிட்டார்.

செந்தில் பாலாஜியிடம் கொடுக்கப்பட்ட உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

எனது மதிப்புக்கும், அன்புக்கும் உரிய தொகுதி மக்களே, உங்கள் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகிய நான், எனது பொறுப்பு உணர்ந்து, மனப்பூர்வமாக கீழ்க்கண்ட உறுதிமொழியை அளிக்கிறேன்.

அரவக்குறிச்சி தொகுதிக்குள் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நஞ்சை கடம்பன்குறிச்சி, தோட்டக்குறிச்சி, புகழூர்-தவுட்டுபாளையம், நடையனுர்- கோம்புபாளையம் என நான்கு மணல்குவாரிகளுக்கு கடந்த ஆண்டு 09-12-2015 முதல் தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ள மணல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பேன். காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் அனைத்து மணல்குவாரியையும் மூட வைப்பேன்.

அரவக்குறிச்சி தொகுதிக்குள் ஏற்கனவே உள்ள சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் TNPL மற்றும் புகலூர் சர்க்கரை ஆலை போன்ற தொழிற்சாலைகளின் மாசுபடுதலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன். புதிதாக தொடங்கப்படும் மாசு ஏற்படுத்தும் அபாயகரமான தொழிற்சாலைகளை இறுதி வரை எதிர்ப்பேன் .

கடந்த காலத்தில் நான் தெரிந்தோ, தெரியாமலோ இயற்கை வளங்களுக்கும், சுற்றுசூழலுக்கும் எதிரான நடவடிக்கைகளிலும், மணல்கொள்ளைக்கு ஆதரவான நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருந்தாலோ, அல்லது அதற்கு ஆதரவு அளித்து இருந்தாலோ அதற்காக நான் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட உறுதிமொழிகளை நான் மீறினால், எனது தொகுதி மக்கள் என்மீது எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் கட்டுப்படுவேன் என உறுதி அளிக்கிறேன். நான் கொடுக்கும் உறுதிமொழிகளை ஆறு மாத காலத்திற்குள் நிறைவேற்ற தவறினால் எனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களோடு இணைந்து போராடுவேன் என உறுதி அளிக்கிறேன்.

இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுசூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் முழு உடன்பாடு கொண்டு மேற்கண்ட உறுதிமொழிகளை ஏற்று இந்த உறுதிமொழி படிவத்தில் மனப்பூர்வமாக கையெழுத்து இடுகிறேன் என்று அந்த உறுதிமொழி படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டு கேட்க வந்த அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியிடம் உறுதிமொழி கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!