
குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள 13 பொருட்களுக்கான டோக்கன்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் 13 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை, மலிவு விலையில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டமானது வரும் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டு, 5-ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கோதுமை, உப்பு, ரவை ஆகியன தலா ஒரு கிலோவும், சா்க்கரை, உளுத்தம் பருப்பு ஆகியன தலா அரை கிலோவும், புளி, துவரம் பருப்பு ஆகியன கால் கிலோவும் அளிக்கப்பட உள்ளன.
மேலும் கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியன தலா 100 கிராமும், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப் ஆகியன தலா ஒன்றும் என 13 வகையான மளிகை பொருட்கள் தொகுப்புத் திட்டத்தில் இடம்பெறவுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தையும் மலிவு விலையில் கிடைக்குமாறு அரசு தீர்மானித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரா்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் 5-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள 13 பொருட்களுக்கான டோக்கன்கள் இன்று முதல் நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலை கடை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்பொழுது 13 பொருட்களுக்கான டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.