மக்களே உஷார். பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 22 பேருக்கு வைரஸ் தொற்று.. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2020, 1:44 PM IST
Highlights

வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், விமானத்தில் பயணித்த  மற்றவர்களையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் பணி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 22 பேருக்கு  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் 11 பேருக்கும் அமிர்தசரசில் 8 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒருவேளை புதியவகை தொற்றாக இருக்கக்கூடுமோ என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. சுமார் 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலக அளவில் 7.83 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில் அப்பட்டியலில் பிரிட்டன் 6  இடம் பிடித்துள்ளது. 

உலகை வாட்டி வதைத்துவந்த கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக  குறையத்  தொடங்கியதாலும்,  தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததாலும் இந்த வைரஸ் தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்ஆப்பிரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ்  மிக வேகமாக பரவி வருகிறது. அதாவது வளர்சிதை மாற்றமடைந்துள்ள இந்த வைரஸ் முன்பிருந்த வைரஸை காட்டிலும் 70% வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  புதிய வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதையடுத்து கனடா, அயர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், சவுதிஅரேபியா, சிலி, அர்ஜெண்டினா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டுடனான  விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 25 வயது  மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் லண்டனில் இருந்து தமிழகம் வந்த 2,756 பயணிகளின் பெயர் முகவரி போன்றவற்றை சேகரித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரனா பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில்  22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லியை சேர்ந்த 16 பேருக்கும், அமிர்தசரசில் 8 பேருக்கும், கொல்கத்தாவில் 2 பேருக்கும், சென்னையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், விமானத்தில் பயணித்த  மற்றவர்களையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் பணி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் இருந்து திரும்பிய 22 பேருக்கும் புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என தெரியவில்லை, அதனை கண்டறிவதற்காக அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அடுத்த கட்ட பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவு வந்த பின்னரே புதிய வகை தொற்று பரவி உள்ளதா இல்லையா என்பது தெரியும். 
 

click me!