நீட் தேர்வில் பாஸ்.. படிக்க பணமில்ல.. உதவிக்கு ஏங்கிய பழங்குடியின மாணவி.. தாயாக வந்த அரசு பள்ளி ஆசிரியை!

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2021, 12:37 PM IST
Highlights

தற்போது ராஜயலட்சுமி மதுக்கரை அரசுப் பள்ளியில்  பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். பிச்சனூர் பள்ளியில் சங்கவி பயின்றபோது  11, 12 ஆம் வகுப்பிற்கு ஆசிரியை ராஜலட்சுமி தாவரவியல் பாடம் நடத்தியவர் ஆவார். 

நீட் தேர்வு என்ற கொடிய அரக்கனை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்கிறது. ஆனால்  குடிசை வீட்டில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று சாதித்துக் காட்டி இருக்கிறார் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவி சங்கவி.

சாதாரண ஓலைக் குடிசை வீட்டில், மழைக்காலங்களில் புத்தகங்கள் நனைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்து, மனதிற்குள் லட்சியத்தை பொத்தி பொத்தி வைத்து தனது மருத்துவ கனவில் கால் பதித்துள்ளார் சங்கவி. கான்கிரீட் வீட்டில், ஏசி அறையில் தங்கி படித்தும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போராடும் மாணவர்கள் மத்தியில், ஓலை குடிசையில் இருந்து சாதித்துக் காட்டி இருக்கிறார் அவர். 
அவரின் இந்த வைராக்கிய பயணம் விவரிக்க முடியாத வலி நிறைந்ததும் கூட, சங்கவி இதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதை விவரமாக பார்ப்போம்:- 

மருத்துவ படிப்புக்காக தேசிய அளவில் ஒரே தீர்வு முறையை அறிமுகப்படுத்திய ஆரம்பம் முதலே தமிழகம் இதை கடுமையாக எதிர்த்துவருகிறது. சிபிஎஸ்சி படிப்பு முறை வேறு, மாநில பாடதிட்டங்கள் வேறு என்பதால் மாணவர்கள் மருத்துவ படிப்பு கனவு காவு வாங்கப்படும் என்ற அச்சத்தால் இந்த தேர்வு எதிர்க்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மருத்துவ  கனவை எட்ட முடியாத விரக்தியில், அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தேர்வின் தொடக்கத்தில் பல குளறுபடிகள் அரங்கேறின, தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. பல்வேறு கோரிக்கைகள், போராட்டங்கள் விளைவாக தற்போது தேர்வு மைய விவகாரத்தில் மாற்றம் வந்துள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் பெருங்கனவு சுக்குநூறாக உடைத்த இந்த நீட் அரக்கனால்  ஒவ்வொரு ஆண்டும் பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நீட் என்றாலே பதற்றமும், பீதியும், அழுகையும், பரிதவிப்பும், கண்ணீருமாகவே காட்சிகள் நம் கண் முன் வந்து போகும் நிலையில், தந்தையை பறிகொடுத்து குடிசை வீட்டில், மின்சாரம் விளக்கு, சாதி சான்றிதழ் என எந்த ஆதாரமும் இல்லாமல் படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்று சாதித்திருக்கிறார், கோவை மாவட்டம் ரெட்டி கவுண்டனூர் என்ற கிராமத்தை சேர்ந்த  பழங்குடியின மாணவி சங்கவி. சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு  கடந்த நிலையிலும் மின்சாரம், சாலை வசதி, கழிப்பறை என எந்த அரசு உதவிகளும் எட்டிப்பார்க்காத குட்டி கிராமத்தை  பிறந்த சங்கவி  எப்படியாவது படித்து மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்பது அவரின் பெருங்கனவு. அந்த கிராமத்திலிருந்து முதல் முதலாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரும் அர்தான். மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கவியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்தார் அதன் சுக்குநூறாய நொறுங்கிபோனார் அவர்.

ஆனால் அவரின் மருத்துவ கனவு மட்டும் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டே இருந்தது. பின்னர் ஊடகச் செய்திகள் மூலம் சங்கவிக்கு உடனடியாக சாதி சான்றிதழ் கிடைத்தது. நல்ல உள்ளம் கொண்ட மெரிடியன் குழுமம் சங்கவியின் நிலை அறிந்து குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக கட்டிக் கொடுத்தது. தான் கடந்து வந்த பாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கண்ணீர் துளிகளுடன் தெரிவித்துள்ளார் சங்கவி, தற்போது 202 மார்க் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் அவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அம்மாவிற்கு கண் பார்வைக்கு பிரச்சனை ஏற்பட்டதால் முதல் முயற்சியில் தன்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, ஆனால் அதற்கான நிறைய பயிற்சிகள் எடுத்து, நம்பிக்கையோடு போராடியதால் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார் அவர்.பல நோய்களால் தங்கள் கிராம மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையால் மருத்துவராக ஆசைப் பட்டதாகவும்  தெரிவித்துள்ளார் சங்கவி. 

ஒருவழியாக நீட்டில் வென்று முக்கால்வாசி கிணறைத் தாண்டி விட்ட சங்கவிக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான பொருளாதாரம் பெரும் தடையாக மாறியுள்ளது. தனது படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த இக்கட்டான நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கணவரையும், தன் ஒரே மகளையும் காலனுக்கு பறிகொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி ஆபத்பாந்தவனாக முன்வந்துள்ளார். மாணவி சங்கவி ஆசிரியை ராஜ லட்சுமியின் முன்னாள் மாணவி ஆவார். 

தற்போது ராஜயலட்சுமி மதுக்கரை அரசுப் பள்ளியில்  பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். பிச்சனூர் பள்ளியில் சங்கவி பயின்றபோது  11, 12 ஆம் வகுப்பிற்கு ஆசிரியை ராஜலட்சுமி தாவரவியல் பாடம் நடத்தியவர் ஆவார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆசிரியையின் கணவர் ஜெகனாதன் மாரடைப்பால் உயிரிழந்தார், அந்த வலியில் இருந்து ராஜலட்சுமி மீண்டு வருவதற்குள் அவரது ஒரே செல்ல மகள் ஆர்கிடெக் பட்டதாரி அனுப்பிரியாவும் தந்தையின் பிரிவு தாங்க முடியாமல் உயிரிழந்தார். கணவரையும் மகளையும் பறிகொடுத்து தலையில் இடி விழுந்தாற்போல் நொறுங்கிய ஆசிரியை ராஜலட்சுமி இருந்து வந்த நிலையில், ஒரு மாணவி (சங்கவி) படிக்க வசதியின்றி உழல்வதை அறிந்து அந்த மாணவியையே தனது மகளாக பாவித்து அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.  

சங்கவியின் நீட் தேர்வு பயிற்ச்சிக்காக ராஜலட்சுமி ஏற்கனவே உதவி செய்த நிலையில், தற்போது அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளார். சமூகத்தில் பிறரைபோல் தைரியமிக்க மருத்துவராக அவர் வளரவும் சங்கவிக்கு பொருளாதார ரீதியிலும், மனோரீதியிலும் நம்பிக்கையூட்டும் தாயாகவும் உடன் இருந்து உதவி செய்ய போவதாக முடிவு செய்துள்ளார் ஆசிரியை ராஜ லட்சுமி. மகளை இழந்த தனக்கு மகளாக சங்கவி இருப்பார் என்றும் ராஜலட்சுமி நம்பிக்கை வார்த்தைகள் உதிர்த்துள்ளார். லட்சிய பயணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சங்கவி .. மாந்தநேயம் தொடரட்டும் ராஜலட்சுமி. 

click me!