தமிழகத்தில் யாருக்கு ? எத்தனை தொகுதிகள் கிடைக்கும் ? அதிரடி கருத்துக் கணிப்பு !!

By Selvanayagam PFirst Published Mar 11, 2019, 6:51 AM IST
Highlights

ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும், அதிமுக 12 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாமக தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 லும். தேமுதிக 4 தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் 1 , புதிய நீதி கட்சி 1, புதிய தமிழகம் 1 , அதிமுக 20 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதியில் தமாகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

இதனிடையே  தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் திமுக 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என இந்தியா- சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் கருணாநிதி , ஜெயலலிதா, இல்லாததால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து  நாடு முழுவதும் 38600 பேரிடம் 193 மக்களவைத்  தொகுதிகளில் கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன. 

இந்த கருத்துக் கணிப்பு கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை  திமுக 16 இடங்களிலும் , அதிமுக 12 இடங்களிலும் , அமமுக மற்றும்  பாமக தலா 2 இடங்களிலும் மற்ற கட்சிகள்  மீதமுள்ள 8 இடங்களில் வெற்றி பெறும்  என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் தேமுதிக வழக்கம் போல் இந்த தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட  வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக மற்றும் திமுக என இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தியது அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 40  தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்த நிலையில் தற்போது அது மாறியுள்ளது. மக்கள் அதிருப்தில் இருந்த அதிமுக தற்போது 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

click me!