கூட்டணிக்கு முன்பே குடைச்சல் கொடுக்கும் பாஜக... கலக்கத்தில் அதிமுகவினர்!

By Asianet TamilFirst Published Feb 1, 2019, 11:26 AM IST
Highlights

திருப்பூரில் பிரதமர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக பிரமுகர் ஆயத்தமாகி வருகிறார். பாஜக - அதிமுக கூட்டணி உருவானால் அந்தத் தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற பதற்றமும் இரு கட்சிகளிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

திருப்பூரில் பிரதமர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக பிரமுகர் ஆயத்தமாகி வருகிறார். பாஜக - அதிமுக கூட்டணி உருவானால் அந்தத் தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற பதற்றமும் இரு கட்சிகளிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி திருப்பூரிலும், 19ம் தேதி கன்னியாகுமரியிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பாஜகவுக்கு சற்று செல்வாக்கு இருப்பதால், இந்தத் தொகுதிகளில் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. கோவை அல்லது திருப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளில் தமிழக பாஜக செயலாளர் வானதி சீனிவாசன் ஈடுபட்டுள்ளார். கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்பதால், திருப்பூர் தொகுதியிலும் வானதி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறார். 

அதனால்தான், டெல்லியில் தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி திருப்பூரில் பிரதமர் மோடியைப் பிரசாரம் செய்ய வானதி அழுத்தம் கொடுத்ததாக திருப்பூர் பாஜகவினர் கூறுகிறார்கள். இதற்கிடையே அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இறுதியில் இந்தக் கூட்டணி நிச்சயம் அமையும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக பாஜகவினர் உள்ளனர். 

அதிமுக கூட்டணியோடு திருப்பூரில் போட்டியிடும்போது வெற்றி கிடைக்கும் என்றும் பாஜகவினர் நம்புகிறார்கள். இதனால், இந்தத் தொகுதியில் போட்டியிட வானதி மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார். அதே வேளையில், திருப்பூர் அதிமுக எம்பியான சத்யபாமா நாடாளுமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பெயரெடுத்தவர் சத்யாபாமா. நாடாளுமன்ற கூட்டத்தில் அதிக நாட்கள் பங்கேற்றவர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவளாரான இவருக்கு மீண்டும் திருப்பூர் தொகுதியை அதிமுக தலைமை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

ஒரு வேளை அதிமுக - பாஜக கூட்டணி அமைந்து திருப்பூர் தொகுதி கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சம் தற்போதைய திருப்பூர் அதிமுகவில் நிலவி வருகிறது. எனவே கூட்டணி உருவானால், திருப்பூர் தொகுதிக்காக இரு கட்சிகளும் மல்லுக் கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் பாஜக போட்டியிடும்பட்சத்தில் திருப்பூர் எப்படியும் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்ற மன தைரியத்தில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.

click me!