
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி மாவட்டத்தில் தனது அரசியல் பயணத்துக்கான முதல் கியரை போட்டதையும், படிப்படியாக வளர்ந்து தன் அப்பாவின் மூலம் தங்கத்தமிழ் செல்வனை டம்மியாக்கி தான் உயர்ந்ததையும், பின் உள்நாடு மற்றும் வெளிநாடு அளவில் பல பிஸ்னஸ்களில் மூழ்கி ஏகபோகமாக கரன்ஸி விளைச்சலை அறுத்துக் கொட்டியதையும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் சீட் கேட்டபோது உளவுத்துறையின் ரிப்போர்ட் மூலமாக இவரை சசி டீம் காலி செய்ததையும் நமது இணையதளம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அதில் கரூர் அன்புநாதன் சிக்கிய விவகாரம் மற்றும் சென்னையை சேர்ந்த ஒரு கட்டிட நிறுவனத்தின் வழக்கு விவகாரம் இரண்டிலும் ரவியின் பெயர் அடிபடுவதால் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். ரவி தலைமறைவாக இருக்கிறார் என்பதை பன்னீரின் டீம் மறைப்பதை சொல்லியிருந்த நாம், ரவியை அரெஸ்ட் செய்வதாக பூச்சாண்டி காட்டி பன்னீரை தங்களிடம் பணிய வைக்க அ.தி.மு.க.வின் இன்னொரு டீம் திட்டமிடுவதையும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் ரவிக்கு ஆதரவாக தேனி, மதுரை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் அ.தி.மு.க.வினரிடையே ஒரு வீடியோ பரவி வருகிறது.பன்னீரின் மகன் ரவி இருக்கும் பல வித ஸ்டில்களை போட்டு பின்னணியில் ‘அவன் ஓடி ஒளியுற ஆளில்ல, தேடி அடிக்கிற ஆளு! வந்துட்டான் பார்” என்கிற பில்ட் அப் வார்த்தைகளுடன் ‘அடக்குனா அடங்குற ஆளா நீ? நெருப்புடா நெருங்குடா பார்ப்போம், நெருங்குனா பொசுக்குற கூட்டம்.’ என்று கபாலி பாட்டு தூள் பறக்கிறது அந்த வீடியோவில்.
தென்னகத்தில் வைரலாகும் இந்த வீடியோ பன்னீரின் கவனத்திற்கு போய் அவரது வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்.
‘பேயாம இருங்கப்பேன்னு சொன்னா கேக்குறீகளா! ரவிய தூக்கி உள்ள வெக்காம அடங்கமாட்டீயாளாடே. ஒங்களுக்கு என்ன வேணும், அவம் உள்ள போவணுமா?’ என்று ரவிக்காக இந்த பில்ட் அப் வீடியோவை ரெடி செய்தவர்களை வறுத்தெடுத்துவிட்டாராம்.
எடப்பாடி மற்றும் தினகரனின் கவனத்துக்கும் இந்த வீடியோ சுடச்சுட பார்சலானது. தினகரன் வழக்கம்போல் சிரித்துக் கொள்ள, ‘பார்த்தீயளாண்ணே உங்க முன்னாடி டிரவுசர், பனியம் போட்டுட்டு திரிஞ்ச சின்ன பயலுவலெல்லாம் இன்னிக்கு பஞ்சு (!?) வசனம் சொல்லி வீடியோ போடுறானுவ. நீங்க இவுகள தட்டி வெக்காம மன்னிச்சு வுடுறது பெரிய தப்புண்ணே!’என்று பொசுங்குகிறார்களாம் அவரோடு இருப்பவர்கள்.
எடப்பாடி அணியின் முக்கிய நிர்வாகிகள் இந்த வீடியோவுக்கு நக்கலான சிரிப்பொன்றை முதலில் பதிவு செய்தார்களாம். அதன் பின் ரவி பற்றிய ஃபைல்கள் சிலவற்றை பல துறை ரீதியில் தோண்டவும் உத்தரவிட்டிருக்கிறார்களாம். அதில் ரவிக்கு பாதகமான முகாந்திரங்கள் எதுவுமிருந்தால் “நெருங்குவோம், அந்த நெருப்பு என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்.” என்று சவால் விட்டிருக்கின்றனர்.
பன்னீருக்கு போதாத காலம்பே இது!