
நாளை ஆட்சி மன்றக்கூட்டம் நடைபெறும் எனவும் அதில் ஆர்.கே.நகரில் வேட்பாளராக யார் களமிறங்குவார்கள் என முடிவு எடுக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் ஏற்கனவே போட்டியிட்டபோது வாக்காளருக்கு டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான புகார்கள் வந்ததால் தேர்தலை ரத்து செய்வதாக ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கு பிறகு மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் திமுக சார்பில் மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருவதால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்து வருகிறது. கடந்த முறை தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய மதுசூதனனுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் விருப்ப மனுவை அளித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவால் நேற்று நடைபெற இருந்த ஆட்சிமன்றக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் அதிமுக வேட்பாளர் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நாளை ஆட்சி மன்றக்கூட்டம் நடைபெறும் எனவும் அதில் ஆர்.கே.நகரில் வேட்பாளராக யார் களமிறங்குவார்கள் என முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.