இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது..!! சீனாவை எகிறி அடித்த கேப்டன்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2020, 6:57 PM IST
Highlights

எந்த அண்டை நாட்டின் அச்சுறுத்தலுக்கும் இந்தியா பின்வாங்காது என்றும், இந்தியாவை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் சீனாவை அவர் எச்சரித்துள்ளார்.

இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டுமென பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சிக்க வேண்டாம் எனவும் சீனாவை எச்சரித்துள்ள அவர், எந்த அண்டை நாட்டில் இருந்து வரும்  அச்சுறுத்தலுக்கும் இந்தியா பின்வாங்காது என்று அவர் எச்சரித்துள்ளார். உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்,  இந்தியா, சீனா-பாகிஸ்தான் என்ற எதிரிகளிடம் இருந்து நாட்டைக் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த மே -5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்திய சீன  எல்லையான  பாங்காங் த்சோ என்ற ஏரி பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல் ஒன்பதாம் தேதி சிக்கிமை ஒட்டியுள்ள நகுலா பாஸ் என்ற இடத்தில் இந்திய-சீன படைகளைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் நேரடியாக மோதிக் கொண்டனர். அதில் இரும்பு கம்பி, தடிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதுடன்,  ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  அதில் இருதரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

அதைத்தொடர்ந்து இருதரப்பிலும் லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்,  பிரச்சனைகள் தணிந்தன.  ஆனால் மே-22ஆம் தேதி இந்திய-சீன எல்லையான கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரர்கள் அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்ததாக இந்திய ராணுவ வீரர்கள் மீது புகார் கூறியதுடன் எல்லையில் ஏராளமான  படைகளை குவித்து வருகிறது. இதனால்  கால்வான் பள்ளத்தாக்கு பகுதி,  பாங்கொங் த்சோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துக்கு நிகராக இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக எல்லையில் இரு நாடுகளும் படைகளை  குவித்து வருவதால்,  பல்வேறு சர்வதேச நாடுகளின் பார்வையும் இந்திய-சீன எல்லைப் பக்கம் திரும்பியுள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு ராஜதந்திர ரீதியில் தீர்வுகாண வேண்டுமென அறிவித்துள்ளார்.  அதே நேரத்தில் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சிக்க வேண்டாமென சீனாவை அவர் எச்சரித்துள்ளார். 

எந்த அண்டை நாட்டின் அச்சுறுத்தலுக்கும் இந்தியா பின்வாங்காது என்றும், இந்தியாவை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் சீனாவை அவர் எச்சரித்துள்ளார். நாங்கள் போரை விரும்பவில்லை என்றாலும் சீனாவில் சண்டையை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம், இது 1962  அல்ல,  சீனா இத்தகைய நடத்தையை நிறுத்தவில்லை என்றால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார். ஃபேஸ்புக் லைவ் மூலம்  கொல்கத்தாவில் வசிக்கும் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கு இந்திய ராணுவம் பொருத்தமான பதிலளிக்க தயாராக உள்ளது,  சீனா இனி இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி எல்லையில் எந்த ஒரு கட்டிடம் கட்டுவதையும் சீனா தடுக்க முடியாது எனக் கூறிய அவர், சீனா அக்சய் சின் பகுதியில் சாலைகளை அமைக்கும் போது நாங்கள் எதிர்த்தோம், ஆனால் அப்போது அது கேட்கவில்லை,  ஆனால் இந்தியா தற்போது தனது பகுதியில் சாலைமை அமைப்பதால் சீனா ஆத்திரப்படுகிறது என கண்டித்த அவர், பாகிஸ்தானையும் கடுமையாக விமர்சித்தார். ட்ரோன்கள் மற்றும் பிற வழிகளில் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை இந்திய எல்லைக்குள் அனுப்புவதன் மூலம் பஞ்சாப் மாநிலம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பாகிஸ்தான் இடையூறுகளை உருவாக்க முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். கடந்த மாதங்களில் பஞ்சாப் காவல்துறையினர் 32 தீவிரவாத பகுதிகளை கண்டுபிடித்து 200க்கும் மேற்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார். 
 

click me!