
மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசிடமிருந்து 1500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி நாளிதழ் பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலாளர் சோமநாதன் இல்லத்திருமண விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். விழாக்களில் கலந்துகொள்வதற்கு முன்பாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் தமிழகத்தில் கனமழை பாதிப்பு குறித்து சுமார் அரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
விழாக்களில் கலந்துகொண்ட பிரதமர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை வழியனுப்பினர்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கனமழை பாதிப்பு தொடர்பாக பிரதமரிடம் தெளிவாக விளக்கியதாக தெரிவித்தார்.
கனமழையின்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வடிகால் வசதி குறித்த திட்ட விளக்கம் பிரதமரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 1500 கோடி ரூபாயை நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திட்ட விளக்கத்தை ஆய்வு செய்து தேவையான நிதியை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். கனமழை பாதிப்பு குறித்து கேட்டறிந்து நிதி ஒதுக்க உறுதியளித்த பிரதமருக்கு நன்றி.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.