பிடிவாதத்தை தளர்த்தும் சிவசேனா !! தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் ?

Published : Oct 30, 2019, 07:43 PM IST
பிடிவாதத்தை தளர்த்தும் சிவசேனா !! தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் ?

சுருக்கம்

மகாராஷ்ராவில் பாஜக – சிவசேனா கூட்ட இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி இருந்த நிலையில் தற்போது சிவசேனா பிடிவாதத்தை தளர்த்தியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா முதலமைச்சராக, பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் வருகிற வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்றுள்ளதால் ஆட்சியமைப்பதில், எந்த சிக்கலும் எழவில்லை.

பெரும்பான்மைக்குத் தேவையானதை விட 16 இடங்கள் கூடுதலாகவே பெற்றிருந்தும், தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு எனக்கூறி சிவசேனா உயர்த்தியுள்ள போர்க்கொடியால், பாஜக கூட்டணி அரசு அமைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

5 ஆண்டுகால ஆட்சியில், தலா இரண்டரை ஆண்டுகள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. மேலும், அமைச்சரவையில், உள்துறை, நகர்புற மேம்பாடு, வருவாய், பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சிவசேனா கூறிவருகிறது.

இதனை எழுத்துப்பூர்வ உறுதிமொழியாக பாஜக அளிக்க வேண்டும் என்றும் சிவசேனா கேட்கிறது. சிவசேனாவுக்கு அமைச்சரவையில் போதிய இடம் ஒதுக்க இசைவு தெரிவிக்கும் பாஜக, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை ஒதுக்க முடியாது என்பதில் தீர்மானமாக உள்ளது.

இதையடுத்து, சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் குழு ஒன்றையும் பாஜக ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், வருகிற வெள்ளிக்கிழமையன்று, தேவேந்திர ஃபட்னவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க கூடும் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

ஒருவேளை அன்றைய நாளில், விழா நடைபெறாவிட்டால், சனிக்கிழமையன்று, பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக வட்டாரத் தகவல்கள் கூறியுள்ளன.

இதற்கிடையே, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்ற பிடிவாத கோரிக்கையிலிருந்து சற்று இறங்கி வந்திருக்கும் சிவசேனா, அமைச்சரவையில், மொத்தமுள்ள பதவியிடங்களில், பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில் ஒதுக்கினால், பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு இசைவளிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால், மராட்டியத்தில், பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதற்கான சிக்கல் நீங்கி  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..