
பதினெட்டு வயதில் நாட்டின் பிரதமரையே தேர்வு செய்யும்போது திருமணம் செய்யக் கூடாதா என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருந்து வருகிறது. திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இந்தக் குளிர்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு சட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது.
அந்த வகையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக ஓவைசி கூறுகையில், “பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவு சரியல்ல. 18-வயதில் நாட்டின் பிரதமரையே தேர்வு செய்யும் பொழுது திருணம் மட்டும் செய்யக்கூடாதா? ஏற்கனவே குழந்தைகளின் திருமணத்தை தடுக்க சட்டம் இருக்கிறது. ஆனால், அதைத் தடுக்க முடிகிறதா? முடியவில்லையே. பெண்களுக்கு கல்வி, பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதே முக்கியம். அதை கருத்தில்கொண்டு பெண்கள் மற்றும் ஆண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணையிக்க வேண்டும்” என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சமாஜ்வாடி கட்சி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் அசாதுதின் ஓவைசியும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.