இதுக்கா அப்படி அடிச்சுக்கிட்டிங்க.. மோடியுடன் குரூப் போட்டோ எடுத்துக்கிட்ட ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2021, 5:25 PM IST
Highlights

பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சி அடங்கிய குப்கர் கூட்டமைப்பு காங்கிரஸ் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் உள்ள 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இதற்கான ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் 4 பேர் உட்பட 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் அவர்கள் கலந்து கொண்டனர். 

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அவைகள் 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இது அம்மாநிலத்தில் மிகுந்த கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இதில் முன்னதாகவே காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சர்ஜான் லோன் போன்றோர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். மேலும் அம்மாநிலத்தில் போராட்டம் பரவுவதை தடுக்க இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. 

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டுமென நாடு முழுவதும் கோரிக்கைகள், கண்டனங்கள் எழுந்தன. அங்கு நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து, வீட்டுக்காவலில் இருந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் கூட மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மீண்டும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் வகையில் 2020 இல் அங்குள்ள பல கட்சிகள் இணைந்து குப்கர் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசியல் கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான சுமுகமான உறவை ஏற்படுத்தும் முயற்சியாக, அம்மாநிலத்தில் எதிர்கால வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் சுமுகமாக சட்டமன்ற தேர்தலை நடத்துவது போன்ற இலக்குகளை மையமாக வைத்து அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. 

அதற்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றுள்ள நிலையில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கிறது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற  இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வர், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகமி, ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, பி.டி.பி-பாஜக அரசாங்கத்தில் துணை முதல்வரின் பொறுப்பு வகித்த  கவீந்தர் குப்தா, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சி அடங்கிய குப்கர் கூட்டமைப்பு காங்கிரஸ் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். காஷ்மீர் 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு முந்தைய நிலைமை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என  மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை  இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

click me!