
2016 சட்டமன்ற தேர்தலில் 8 சீட்டுக்கு கூட தகுதி இல்லை என ஜெயலலிதாவை, சசிகலா தடுத்ததால், அவமானததுக்கு ஆளாகி போனவர் ஜி.கே.வாசன்.
ஜி.கே.வாசன் மட்டுமல்ல. அதிமுக கூட்டணியில் நிச்சயம் இடம் உண்டு என உறுதி அளிக்கப்பட்ட பண்ருட்டி வேல்முருகனுக்கும், சரத்குமாருக்கும் அதே நிலைமைதான்.
ஆனால், மாலை முரசு அதிபர் மூலமாக ‘லாபி’ செய்து, ஒரு வழியாக அடித்து பிடித்து, சரத்குமார் மட்டும் திருச்செந்தூரில் போட்டியிட சீட்டு வாங்கினார். இறுதியில் திமுகவின் அனிதா ராதா கிருஷ்ணனிடம் மண்ணையும் கவ்வினார்.
த.மா.கா.வில் ஜி.கே வாசனை பொறுத்த வரை 30 சீட்டு வேண்டும் என ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அது 20 ஆகி, பிறகு 15 ஆகி, அதன் பின்னர் 12 என குறைந்து கடைசியில் 8 சீட்டுதான் கொடுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டனர் அதிமுகவினர். அந்த 8 சீட்டுக்களும், அவர்கள் ஒதுக்கும் இடம்தான். தாங்கள் கேட்ட இடங்கள் இல்லை என்பது கூடுதல் விஷயம்.
இதனால் கூட்டணியில் நிச்சயம் இடம் உண்டு என உறுதி அளிக்கப்பட்டு இருந்ததால், கடைசி வரை நம்பி ஏமாந்து போனார் ஜி.கே.வாசன்.
தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா எப்போதுமே ஒரு மரியாதையை மெயின்ட்டெய்ன் பன்னுவார் என நம்பிக்கையோடு இருந்தார் வாசன்.
அதை சசிகலாவும், அவரது குடும்பத்தினரும்தான் கெடுத்து குலைத்துவிட்டார்கள் என வாசனுக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த த.மா.கா. தற்போது வரை ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில், சசிகலா குடும்பத்தால்தான் தங்களுக்கு கூட்டணியில் இடம் கிடைக்காமல் போனது என உறுதியாக நம்புகின்றனர் த.மா.க.வினர்.
அந்த கடுப்பை வெளிகாட்டும் விதமாகத்தான், தற்போது ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி, ஓ.பி.எஸ்.ஸுடன் கை கோர்த்தால் தான் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களையாவது கைப்பற்ற முடியும் என நம்புகிறாராம் ஜி.கே.வாசன்.
எனவே ஒரே கல்லில் 3 மங்காய் அடிக்கும் விதமாக, சசிகலா குடும்பத்தினரை வெறுப்பேற்றியதும், அரசியலின் வெளிச்சத்துக்கு வந்ததும், சொந்த கட்சியினரையும் குஷிபடுத்தியது என 3 விஷயத்தை முடித்துள்ளார் ஜி.கே.வாசன்.