
பாஜக தூண்டிவிட்டதால்தான் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் என்னும் நாடகத்தைத் தொடங்கினார் என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு மறுத்ததால் ஜெயலலிதா மீது இருந்த கோபத்தை தற்போது தங்கள் குடும்பம் மீது பாஜக காட்டுவதாகவும் டி.டி.வி.தினரகன் அதிரடியாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது உடன்பிறவா சகோதரியாக செயல்பட்ட சசிகலா தமிழக முதலமைச்சராக முயன்றார். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போதே பாஜகதான் பன்னீர் செல்வத்தை தூண்டிவிடுவதாக பேசப்பட்டது. அதன் பிறகு சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்து பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராகிவிட்டார்.
இந்நிலையில் தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகளையும், பிரதமர் மோடிதான் அணைத்து வைத்தாக தெரிவித்தார்.மேலும் சசிகலா குடும்பத்தினர் தனக்கு கொடுத்த அழுத்தத்தால் தற்கொலைசெய்துகொள்ள முயன்றதாகவும் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த டி.டி.வி.தினகரன், முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் ஓபிஎஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார் என தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் தூண்டுதலாலதான் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தர்மயுத்தத்தைத் தொடங்கினார் என்றும் அவர் கூறினார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாஜகவின் முகவராக செயல்பட்டு வருகிறார் என்றும், சசிகலா நினைத்திருந்தால் அவரே தமிழக முதலமைச்சராகி இருப்பார் என்றும் தினகரன் கூறினார்.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கவில்லை என்றும், அதற்கு மாறாக ‘மோடியா, இந்த லேடியா’ என மோடிக்கு எதிராக போட்டியிட்டு 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார் என்றும் தெரிவித்த டி.டி.வி.தினகரன், இதன் காரணமாக ஜெயலலிதா மீது பாஜக கடும் கோபத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அந்த கோபத்தை அவர் மீது காட்ட முடியாததால் தற்போது ஜெயலலிதாவுடன் 30 வருடங்களாக இருந்த எங்கள் மீது பாஜக காட்டுவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.