மன்னார்குடியில் மாஸ் காட்டிய பன்னீர் செல்வம் ….ஜெ மறைந்த போது தன்னை முதலமைச்சராக்கியது யார் ? உண்மையை உடைத்த ஓபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Sep 2, 2018, 6:53 AM IST
Highlights

ஜெயலலிதா மறைந்தபோது தான் எவ்வளவோ மறுத்தும் திவாகரன்தான் வற்புறுத்தி தன்னை முதலமைச்சராக்கினார் என்றும் ஆனால் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு தானே முதலமைச்சராகலாம் என கணக்குப் போட்ட தினகரனின் கனவு தனது தர்மயுத்தத்தால்  பலிக்காமல் போனதாக  ஓபிஎஸ் தெரிவித்தார்.

காவிரியில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா வழிநிற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், சாதனைகளை விளக்கியும் திருவாரூர் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அ.தி.மு.க ஆட்சியில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தான் சட்ட போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு காவிரியில் உள்ள உரிமையை மீட்டு தந்தார் என குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை மூன்று, நான்காக உடைத்து பார்த்தாலாவது நாம் முதலமைச்சராக  வாய்ப்பு வருமா என ஸ்டாலின் பார்க்கிறார். ஆனால் அ.தி.மு.கவை ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என குறிப்பிட்டார்..



மன்னார்குடியில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய தினகரன் என்னை துரோகி என்று பேசியுள்ளார். தினகரன் என்ன பெரிய தியாகியா?அ.தி.மு.க.விற்காக என்ன தியாகத்தை அவர் செய்துள்ளார்? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்தோம் என்று சசிகலா தரப்பினர் கூறுகிறார்கள். அவர்கள்  அ.தி.மு.க.வை கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்து கொண்டதால்தான் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்..



ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திவாகரன் என்னிடம், நீங்கள் முதலமைச்சராக  இருங்கள் என வலியுறுத்தினார். நான் மறுத்தேன். மீண்டும் வலியுறுத்தினார். இவர்களது குடும்பத்தின் குணம் தெரிந்த நான் அவரிடம், நான் மூன்று மாதங்கள் மட்டும் முதலமைச்சராக இருக்கிறேன். பின்னர் நீங்கள் வேறு யாரையாவது மாற்றிக்கொள்ளுங்கள் என கூறினேன். அதன்பிறகு அவர்களிடம் நான் பட்ட கொடுமைக்கு அளவேயில்லை என கூறினார்.



எங்கே நான் நிரந்தர முதலமைச்சராக இருந்து விடுவேனோ என பயந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். பிறகு நான் தர்ம யுத்தம் ஆரம்பித்து மூன்று மாதத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என்னை புரிந்து கொண்டனர்.

பின்னர் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒன்றிணைந்தோம். அ.தி.மு.க தொண்டர்கள், நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என விரும்பினார்கள். தினகரன் மட்டும் தான் நாங்கள் ஒன்றிணைவதை விரும்பவில்லை என ஓபிஎஸ் பரபரபப்பாக பேசினார்..

click me!