
சசிகலாவுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களுக்கு 3 கோடி பணம்,3 கிலோ தங்கம்…போட்டுடைத்த ஓபிஎஸ்…
சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக சென்னை கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு 3 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கிலோ தங்கம் வழங்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலா ஒரு அணியாகவும், ஓபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனி அணியாக பிரிந்து வந்த ஓபிஎஸ் கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.நேற்று கிரீன்வேய்ஸ் சாலையில் நிர்வாகிகளிடையே பேசிய அவர், தனக்கு முதலமைச்சர் பதவி போனதை எண்ணி ஒருபோதும் வருந்தியது இல்லை என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவியில் இருந்தால் தஞ்சாவூர் பொம்மை போன்று சசிகலா குடும்பத்தினர் தன்னை ஆட்டிப் படைப்பார்கள் என்றும் ஜெயலலிதா வளர்த்த கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த தர்ம யுத்தத்தை தொடங்கியதாக கூறினார்.
சசிகலாவை அதிமுக வின் பொதுச்செயலாளராக தொண்டர்களும், பொது மக்களும் ஏற்க மறுத்து வரும்போது, அவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார்.
சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதற்காக கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு 3 கோடி ரூபாய் ரொக்கம், 3 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டதாகவும், அதை வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்து தப்பி வந்தவர்கள்தான் நமது எம்எல்ஏக்கள் எனவும் தெரிவித்தார்.
அதிமுக வை உடைக்க தான் போராடவில்லை என்றும், ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகாத்தான் போராடி வருவதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.