
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு என்பது சாத்தியமில்லை என்பதால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவை ஓபிஎஸ் கலைப்பதாக அறிவித்தார். இந்நிலையில் அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என, அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இரு அணிகளையும் இணைக்க, இருதரப்பிலும் சிலர் முயன்றனர்.
இருதரப்பிலும் பேச்சு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. இரு அணிகளும் இணைந்து விடும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சசிகலா குடும்பத்தை முழுவதும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும்… ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான், பேச்சை துவக்க முடியும்' என, ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்தது.
அதை தொடர்ந்து, தினகரனை கட்சியில் இருந்து விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்; சசிகலா குறித்து எந்த தகவலும் தெரிவிக்க வில்லை. ஆனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த, சசிகலா பேனர்களை மட்டும் அகற்றினர்.
ஆனால், தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க, கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிய பிரமாண வாக்குமூலத்தில், பொதுச் செயலர் சசிகலா, துணை பொதுச் செயலர் தினகரன் என்ற வாசகத்தை நீக்கவில்லை.
இதனால், அமைச்சர் கள் நாடகமாடுவதாக, ஓபிஎஸ் அணியினர் சந்தேகம் அடைந்தனர். மேலும், முதலமைச்சர் பதவி மற்றும் பொதுச் செயலர் பதவியை விட்டுத் தர, சசிகலா அணியினர் முன்வரவில்லை. இதனால், இணைப்பு பேச்சு துவங்குவது தடைபட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த தினகரன், , எடப்பாடி பழனிசாமிக்கே ஆப்பு வைக்கும் வேலையை தொடங்கினார்.
32 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாகவும், எடப்பாடிக்கு எதிராகவும் களமிறங்கினர்.
இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில் மாவட்ட வாரியாக, நிர்வாகிகள் நியமனம் செய்து, தன் அணியின் செயல்பாடுகளை வேகப்படுத்த, பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இன்றும் ஓரிரு நாட்களில், நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ககப்படுகிறது.