
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவ்வவ்போது அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 ஆவது முறையாக கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது.இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்தும், தங்களது கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க இன்று அமைச்சரவை கூடவுள்ளதாக தெரிகிறது.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு கூவத்தூரில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து சட்டப் பேரவையில் எதிர்கட்சிகள் விரச்சனை எழுப்புவார்கள் என்பதால் அது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்டவுள்ளதாக தெரிகிறது.
அதே நேரத்தில் தற்போது அதிமுக கட்சிக்குள் நிலவும் பிரச்சனை, குறிப்பாக தினகரன் பிரச்சனை ஆகியவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்ட மசோதாக்கள் தவிர, எம்எல்ஏக்கள் அளித்துள்ள கோரிக்கைகள், செயல்பாட்டில் உள்ள பொதுத்திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.