
மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் பேசியதாக வெளிவந்த வீடியோ குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுற்று ஒ.பி.எஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறி மக்கள் கவனத்தை ஈர்த்தார் ஒ.பி.எஸ்.
இதில் மக்கள் அணி அணியாக திரண்டு பன்னீர்செல்வம் வீடு தேடி வரத்தொடங்கினர். மேலும் பன்னீருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களும் எம்.எல்.ஏக்களுக்கு ஃபோன் மூலமாக டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏக்கள் மீட்டிங் போட்டு உடனே அனைத்து எம்.எல்.ஏக்களையும் கூவத்தூருக்கு அழைத்து சென்றார் சசிகலா. அங்கு 5 நாட்களுக்கும் மேலாக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கபட்டிருந்ததால் வீடுகளுக்கு கூட செல்லமுடியாத நிலை நீடித்தது.
இதனால் சசிகலா வசம் இருந்த எம்.எல்.ஏக்களும் ஒருவர் ஒருவராக பன்னீர் அணிக்கு தாவினர். இதில் முதல் ஆளாக வெளியே வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ஆவார்.
அப்போது கூவத்தூரில் இருந்து தான் தப்பித்து வந்ததாகவும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பன்னீர் அணிக்கு வந்ததாகவும் சரவணன் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து சசிகலா வசம் இருந்த எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஒ.பி.எஸ்சிடம் தஞ்சம் அடைந்தனர்.
இதனிடையே அதிமுகவின் ஆட்சியை கலைக்கும் விதத்தில் திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தடுமாற்றத்தை கண்டு வருகிறது.
ஆனால் இதுவரை ஆட்சி கலையாமல் நிலை நிறுத்தி வருகின்றனர்.
மக்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திர உரிமை ஓட்டுரிமை. அதை பயன்படுத்தி ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள் தங்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அனைவரும் மக்களை ஏமாற்றியது போன்ற ஒரு வீடியோ நேற்று ஆங்கில செய்தி சேனலில் வெளியானது.
அதில், கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா எம்.எல்.ஏக்களுக்கு பணமும், தங்க கட்டிகள் கொடுக்கப்பட்டதாகவும், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.
மேலும், சசிகலா தரப்பு மூன்று எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டது எனவும், சிலருக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை எனவும் சரவணன் தெரிவித்தார்.
பன்னீர் செல்வம் அணியிலும் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக கூறினர் என்று சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார். சரவணின் இந்த வாக்குமூலம் தமிழகத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரவணனின் இந்த வாக்குமூலத்தை மூலதனமாக வைத்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வீடியோ விவகாரம் குறித்து எம்.எல்.ஏ சரவணனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.