
அணிகளை இணைத்து விட்டால், இரட்டை இலை சின்னத்தை எளிதாக மீட்டு விடலாம், அடுத்து உள்ளாட்சி தேர்தலையும் பிரச்சினை இல்லாமல் சந்திக்கலாம் என்பதே எடப்பாடி அணியின் திட்டமாக இருந்தது.
ஆனால், தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டு விலக்குவது மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு, பரிந்துரைப்பது உள்ளிட்ட பன்னீரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், எடப்பாடி அணி உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரியவில்லை.
மறுபக்கம், முதல்வர் மற்றும் போது செயலாளர் பதவியை பன்னீருக்கு வழங்காமல் தவிர்ப்பதே எடப்பாடி அணியின் நோக்கமாக உள்ளது.
இதை தெளிவாக உணர்ந்த பன்னீர் தரப்பு, எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்தே அவரை சுழற்றி அடிக்கும் வேலையை தொடங்கி உள்ளது.
அதன் முதல் கட்டமாக, தங்கள் அணியின் தொண்டர்கள் தனித்து இயங்கவே விரும்புகிறார்கள் என்று சேலம் மாவட்டத்தின் சார்பில், செம்மலை மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சொந்த மாவட்டமாக இருந்தாலும், அந்த மாவட்டத்தில் அவர் கடந்த காலத்தில் செய்த ஜாதி அரசியலால், அவருக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.
அங்குள்ள பெரும்பான்மை சமூகத்தை முழுவதுமாக புறக்கணித்து விட்டு, தமது சமூகத்திற்கு மட்டுமே பொறுப்பும், கட்சிகளை கடந்து டெண்டர்களும் வழங்கி வந்தார்.
அது, இப்போது அவருக்கே இடையூறாக மாறி உள்ளது. குறிப்பாக அவருடைய எடப்பாடி தொகுதியே, பாமக வலுவாக உள்ள தொகுதியாகும்.
அதனால், எடப்பாடி அடுத்த தேர்தலை சந்திக்கும்போது, திமுக, அல்லது பன்னீர் அணி பாமகவுடன் இணைந்தால், எடப்பாடிக்கு டெபாசிட் கூட தேறாது என்று சொல்லப்படுகிறது.
அதனால், எடப்பாடிக்கான முதல் எதிர்ப்பை, அவரது சொந்த ஊரான சேலத்தில் இருந்து தொடங்கலாம் என்று திட்டமிட்டே, செம்மலை மூலம், பன்னீர் அதை நிறைவேற்றி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சசிகலா, அதிமுக பொது செயலாளர் ஆனபோது, வலுவான முதல் எதிர்ப்பு சேலத்தில் இருந்துதான் கிளம்பியது. அதனால், தீபாவுக்கு அங்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.
ஆனால், சசிகலாவுக்கு எதிராக பன்னீர் போர்க்கொடி பிடித்ததை அடுத்து, சசிகலாவுக்கு எதிரான தொண்டர்கள் அனைவரும், பன்னீர் பக்கம் திரும்பி விட்டனர்.
தற்போதைய நிலையில், அணிகள் இணைப்பு தேவை இல்லை என்று பன்னீர் அறிவித்து விட்டால், பன்னீர் அணி தொண்டர்களின் எதிர்ப்பை மீறி, முதல்வர் எடப்பாடி, சேலத்தில் நுழைய, கடுமையான போராட்டங்கள் பலவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதே தற்போதைய நிலவரம்.