துணை முதலமைச்சர் பதவியை தூக்கி எறிய முடிவு! கட்சி கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் எதிர்காலத்தில் CM!ஓபிஎஸ் தாறுமாரு ப்ளான்...

By sathish kFirst Published Aug 25, 2018, 3:57 PM IST
Highlights

துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி அ.தி.மு.க கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டும் முடிவில் ஓ.பி.எஸ் உறுதியாக உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு மாதங்கள் துணை முதலமைச்சராக இருங்கள் அதன் பிறகு எடப்பாடியை கீழே இறக்கிவிட்டு உங்களை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்கிற உறுதிமொழியை ஏற்றே அணிகள் இணைப்பிற்கு ஓ.பி.எஸ் சம்மதம் தெரிவித்தார். மேலும் துணை முதலமைச்சராக இருந்தாலும் உள்துறை, பொதுப்பணித்துறை தனக்கு வேண்டும் என்று ஓ.பி.எஸ் அடம்பிடித்ததும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
  
ஆனால் இப்போதைக்கு வீட்டு வசதி மற்றும் நிதித்துறையை வைத்துக் கொள்ளுங்கள் முதலமைச்சராகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை இயக்கிய நபர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று அ.தி.மு.வின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதலமைச்சராகவும் ஓ.பி.எஸ் ஒப்புக் கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டெல்லி தொடர்புகள் மூலமாக ஓ.பி.எஸ்சை ஓரம்கட்டி மேலிடத்துடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதனால் அவ்வப்போது ஓ.பி.எஸ் கோபம் அடைவதும் பின்னர் சமாதானம் அடைவதுமாக இருந்து வந்தார்.


   
இந்த நிலையில் அணிகள் இணைப்பு முடிந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி ஓ.பி.எஸ் பிடி முற்றிலும் தகர்ந்துள்ளது. அ.தி.மு.கவில் ஒரு மாவட்டச் செயலாளரை கூட ஓ.பி.எஸ் தன்னுடைய சுய விருப்பத்தில் நியமிக்க முடியவில்லை. அதுமட்டும் இன்றி தேனியில் ஒரு இன்ஸ்பெக்ட்டர் கூட ஓ.பி.எஸ்சின் சிபாரிசை ஏற்பதில்லை என்று கூறப்படுகிறது.
   
மேலும் காவல்துறை டிரான்ஸ்பர், விரும்பிய அதிகாரி நியமனம் போன்றவற்றிலும் ஓ.பி.எஸ் பாட்சா எதுவும் பலிக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த ஓ.பி.எஸ் திடீரென அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டுவது என்பது தான் அந்த முடிவு. இதையே தான் செயற்குழுவின் போது நாசூக்காக ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
  
அதாவது தற்போது ஆட்சியில் கொங்குமண்டல அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கட்சியிலும் விரைவில் அவர்கள் ஆதிக்கம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்சை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கட்சி தொடர்பான பிரச்சனைகள் பெரும்பாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சார்ந்தவர்கள் மூலமே தீர்த்து வைக்கப்படுகிறது.


   
இதற்கு முடிவு கட்ட முழு நேரமும் அ.தி.மு.க அலுவலகத்தில் இருக்க ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராவதுடன், கட்சியை காப்பாற்ற துணை முதலமைச்சர் பதவியையே ஓ.பி.எஸ் தூக்கி எறிந்துவிட்டார் என்று தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயர் வரும் என்றும் அவர் நம்புகிறார். கட்சியை கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டால் போதும் எதிர்காலத்தில் முதலமைச்சராகிவிடலாம், ஆனால் கட்சி கைவிட்டுப் போய்விட்டால் அடுத்த முறை அமைச்சர் கூட ஆக முடியாது என்றும் ஓ.பி.எஸ் கூறி வருகிறாராம்.
   
ஆனாலும் அவரை ஆட்டுவிக்கும் அந்த நபர் உத்தரவு கொடுக்காமல் எந்த முடிவையும் தற்போதைக்கு ஓ.பி.எஸ் எடுக்கமாட்டார் என்றே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!