நள்ளிரவில் மாயமான ஓபிஎஸ்.!! - அதிகாலையில் வீடு திரும்பினார்

First Published Dec 22, 2016, 6:13 PM IST
Highlights


முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு ரகசியமாக தன் இல்லத்திலிருந்து கிளம்பியவர் இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் வீடு திரும்பினார். இரவு முழுதும் கார்டனில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 15 நாட்கள் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவரது அமைச்சரவை சகாக்கள் அப்படியே தொடர்கின்றனர். இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக யார் வருவது எனபதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. 

கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டுமென கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் நிலையோ வேறு மாதிரி இருக்கிறது. மேலுக்கு தாங்கள் அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என தெரிவித்தாலும் தனக்கு கீழ் இயங்கும் ஒரு கட்சியாக அதிமுகவை மாற்ற முயல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ் தேர்வை அவர்களே திணித்ததாக கூறப்படுகிறது.

 ஆனால் பொதுச்செயலாளர் தேர்வு விசகாரத்தில் கட்சி அணிகள் விருப்பப்பட்ட ஆள் தான் வர வேண்டும் என்பது கட்சிக்காரர்களின் எண்ணமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் சசிகலா  மாவட்டந்தோறும் தீர்மானம் போடுவது என சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக மாற்றும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த பிரச்சனை பெரிதாக மத்திய அரசுக்கும் கார்டனுக்கும் பனிப்போராக நடந்து வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் ஓபிஎஸ் டெல்லி செல்லும் முன்னர் கவர்னரால் அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமருடன் ரகசியமாக பேசினார்.

 ஓபிஎஸ்சுடன் கூடவே டெல்லி சென்ற தலைமை செயலாளர் , ராமமோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்காமல் ஓபிஎஸ்சை மட்டும் தனியாக அமரவைத்து பேசினார். இந்நிலையில் ஓபிஎஸ்சுடன் டெல்லிக்கு ஜம்முனு சென்ற ராம் மோகன் ராவ் சென்று வந்த இரண்டு நாளில் அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். 

முதல் நாள் செல்வாக்குடன் இருந்தவர் மறுநாள் சரிவை நோக்கி போனார். ராம் மோகன் ராவ் மட்டுமல்ல இன்னும் இந்த ரெய்டு தொடரும் என் பதே  இதன் சாராம்சம். ரெய்டை தொடர்ந்து நேற்றிரவு தனது இல்லத்துக்கு திரும்பிய ஓபிஎஸ்க்கு கார்டனிலிருந்து நேற்றிரவு அழைப்பு வந்தது. இரவு 9.05 மணி அளவில் ஓபிஎஸ் கிளம்பி கார்டனுக்கு சென்றார். 

போலீஸ் அலர்ட் எதுவும் போடாமல் தன்னுடன் ஜாமர் கார் மட்டும் உடன் வர ஓபிஎஸ் வாகனம் வெளியே வந்த போது ஹாயாக பேசிக்கொண்டிருந்த போலீசார் முதல்வர் செல்வதை பார்த்து அதிர்ந்து போய் எழுந்து நின்றனர். ஆனால் இதையெல்லாம் கவனிக்க முடியாத மன நிலையிலிருந்த  ஓபிஎஸ் லைட்டை அணைத்துவிட உத்தரவிட கார் நேராக கார்டனுக்கு  சென்றது. 

வழியில் இரண்டு இடங்களளில் மட்டும் போலீசார் நின்றனர். பின்னர் கார்டனுக்கு சென்ற ஓபிஎஸ் நெடு நேரம் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற சம்பவம் , திடீரென ராம் மோகன ராவ் வீட்டில் ரெய்டு போன்ற விஷயங்கள் அப்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி விவகாரத்தில் ஓபிஎஸ் ஒரு நிலைபாடும் , கார்டன் தரப்பு ஒரு நிலைபாட்டிலும் இருப்பதால் நேற்றைய ஆலோசனையில் பல விஷயங்கள் பேசப்பட்டு அது டெல்லி மேலிடத்திற்கு சமிங்ஞையாக சொல்ல வாய்ப்பு உண்டு . 

இரவு முழுதும் நடந்த ஆலோசனையில் புதிய தலைமை செயலாளர் யார் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் டெல்லியும், கார்டனும் ஏற்றுகொள்கிற ஒருவர் கடைசியில் முடிவானதாக கூறப்படுகிறது. நிதித்துறை செயலர் சண்முகம் முன்னணியில் இருக்க கிரிஜா வஒஇத்தியநாதன் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவராக தேர்வாகியுள்ளார். \

ஆலோசனை முடிந்து ரகசியமாக காலை 4 மணிக்கு ஓபிஎஸ் இல்லம் திரும்பினார். அவர் இல்லம் திரும்பியதற்கு பாதுகாப்புக்கு போலீஸ் அலர்ட் கூட போடப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

click me!