ஜெ., மரணம்! சசிகலாவை காப்பாற்ற முயற்சி! அப்பலோவை பலிகடா ஆக்க முடிவு!

By sathish kFirst Published Sep 27, 2018, 8:18 AM IST
Highlights

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலாவை காப்பாற்றும் வகையில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டு வருவதாக ஆளும் தரப்பு கருதுவதால் இந்த விவகாரத்தில் அப்பலோவை பலிகடா ஆக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சுமார் ஓராண்டாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆணையத்தில் புகார் அளித்த மற்றும் சாட்சியம் அளித்த அனைவரிடமும் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவை குற்றஞ்சாட்டும் வகையில் அதிகாரிகளும் சரி அப்பலோ மருத்துவமனையும் சரி எந்த ஆவணங்களையும் வழங்கவில்லை.
   
இதனால் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணையை முடித்து அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்த விசாரணை அறிக்கை சசிகலாவுக்கு எதிராக இருந்தால் மட்டுமே அ.தி.மு.கவால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியும். அ.தி.மு.க அரசு அமைத்த விசாரணை ஆணையமே சசிகலாவை குற்றஞ்சாட்டவில்லை என்றால் அவர் மீதான அனுதாபம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.


   
தற்போதைய சூழலில் சசிகலாவை ஜெயலலிதா மர்ம மரண விவகாரத்தில் சிக்க வைக்க இரண்டு பேரால் மட்டுமே முடியும். ஒருவர் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார். மற்றொருவர் அப்பலோ மருத்துவமனை தரப்பு. சிவக்குமாரும் சரி, அப்பலோ மருத்துவமனை தரப்பும் சரி துவக்கம் முதலே சசிகலாவுக்கு எதிராக எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கூட அப்பலோவுக்கு வருவதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை தற்போது ஆணையம் கேட்டுள்ளது.
   
அந்த விவரங்கள் கிடைத்த பிறகு சசிகலாவை குற்றஞ்சாட்ட ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆளும் தரப்பு கருதுகிறது. இதே போல் அப்பலோ மருத்துவமனை நிர்வாகமும் கூட ஜெயலலிதா தொடர்பான சி.சி.டி.வி பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்துவிட்டதால் ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் தான் தேனியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., தான் ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று கூறியதாகவும் ஆனால் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று அப்பலோ நிர்வாகம் என்னிடம் பதில் கேள்வி கேட்டதாகவும் திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.


   
மேலும் ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லும் தனது யோசனையை அப்பலோ நிராகரித்துவிட்டதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சசிகலா மீது மட்டும் அல்லாமல் அப்பலோ மீதும் சந்தேகப்பார்வையை திரும்ப வைத்துள்ளார் ஓ.பி.எஸ். அதாவது சசிகலாவும் – அப்பலோவும் இணைந்து ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஓ.பி.எஸ்.
   
அதாவது ஜெயலலிதா மரண விவகாரத்தை பொறுத்தவரை மர்மம் நீங்கவிடக்கூடாது சந்தேக நிழல் சசிகலாவை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அதற்காக அப்பலோ நிர்வாகத்தை கூட பலிகொடுக்கலாம் என்பது தான் தற்போதைய திட்டம் என்று கூறுகிறார்கள்.

click me!