அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த உத்தரவில் அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ச்சியாக விசாரணை நடத்தியது. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த உத்தரவில் அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என உச்சநீததிமன்றம் தீர்ப்பின் மூலம் தெரிவித்துள்ளது.