ஓபிஎஸ் என் பழைய நண்பர்.. பதவி கொடுத்த பிறகே இபிஎஸ்ஸின் சுயரூபம் தெரிந்தது.. கொட்டித் தீர்த்த டிடிவி தினகரன்!

Published : Jun 30, 2022, 10:33 PM IST
ஓபிஎஸ் என் பழைய நண்பர்.. பதவி கொடுத்த பிறகே இபிஎஸ்ஸின் சுயரூபம் தெரிந்தது.. கொட்டித் தீர்த்த டிடிவி தினகரன்!

சுருக்கம்

முதல்வர் பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமியின் குணம் தெரிய வந்தது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சனை நீடித்து வரும் நிலையில்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதான் தற்போது அதிமுகவில் நடக்கிறது. ஆட்சி, அதிகாரம், வசதி, வாய்ப்பு இவற்றை தாண்டி தொண்டர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். அதிமுக பொதுக்குழு என்கிற பெயரில் கூத்துதான் நடந்தது. அதிமுகவில் தற்போது இருப்பது அசிங்கங்கள். அதிலிருந்த சிங்கங்கள் எல்லாம் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.

நாங்கள் நரி கூட்டத்தில் எல்லாம் சேர விரும்ப மாட்டோம். எம்.ஜி.ஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில் உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் என்னுடைய நண்பர்தான். தர்மயுத்தத்துக்குப் பிறகு 2018இல் ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். அதன் பிறகு அவரை சந்திக்கவில்லை. அவருடைய துணைவியர் மறைவுக்கு நட்பு காரணமாகத்தான் சென்று வந்தேனே தவிர வேறொன்றுமில்லை.  உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை முறையீடு செய்ததற்கு பிறகு, அதிமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அதிமுகவின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. நிர்வாகிகளின் பெரும்பான்மையை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. கட்சித் தலைமை பதவியை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். அரசியல் பதவிக்கு எல்லாம் நீட் தேர்வா வைக்க முடியும்.

பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமியின் குணமே தெரிய வந்தது.  அதிமுகவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதிமுகவில் இன்னும் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அதிமுகவில் நடக்கும் பதவிச் சண்டையில் நாங்கள் தலையிட முடியாது. இதை நாங்கள் எங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டோம், திமுகதான் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரை, சண்டை சச்சரவுகளை காட்டிக்கொள்ளாமல் இருந்தனர். ஆட்சி போனபிறகு ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமையென்று போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது அவர்கள் செய்யும் தவறு. நாம் என்ன செய்ய முடியும்? அவர்களுக்காக வருத்தப்படதான் முடியும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!