'விடியலை நோக்கி' என்று சொல்லிவிட்டு, விரக்தியை நோக்கி மக்களை அழைத்து செல்லும் திமுக- இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published May 14, 2023, 9:44 AM IST
Highlights

எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும்  13,000 செவிலியர்களில் கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் பணி இன்னமும் நிரந்தரம் செய்யப்படவில்லையென ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

செவிலியர்கள் போராட்டம்

செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 356-ல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டதுதான் மிச்சம். இப்படி பெரும்பாலான விஷயங்களில் முன்னுக்குப்பின் முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, ஆங்காங்கே இரண்டாண்டு சாதனைக் கூட்டம் நடத்தி வருவது கேலிக்கூத்தாக உள்ளது.

கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வி..! பொறுப்பாளர் அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு டுவிட்

பணி நிரந்தரம் செய்யவில்லை

செவிலியர்களின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கக்கூட தி.மு.க. அரசு தயாராக இல்லை. உலக செவிலியர்கள் தினத்தன்று தங்களுடைய ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், அந்த அளவுக்கு அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. அரசு செவிலியர்களுடைய வாழ்வில் ஒளியேற்றவில்லை. மாறாக. வலியேற்றிக் கொண்டிருக்கிறது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்று 13,000 செவிலியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், பின்னர் அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.

விரக்தியை நோக்கி மக்கள்

ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், மேற்படி 13,000 செவிலியர்களில் கிட்டத்தட்ட 10,000 செவிலியர்களின் பணி இன்னமும் நிரந்தரம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மகப்பேறு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு, இதர படிகள் என எந்தச் சலுகையினையும் அனுபவிக்க முடியாமல் அல்லல்படுவதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். ஊதியத் தொகை 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. 'விடியலை நோக்கி' என்று சொல்லிவிட்டு, ‘விரக்தியை நோக்கி' அனைத்துத் தரப்பினரையும் தி.மு.க. அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

பணி நிரந்தரம் செய்திடுக

செவிலியர்களின் கோரிக்கை என்பது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி மட்டுமல்ல, அரசு சார்பில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் என்பதைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் உடனடியாக முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

அமைச்சர் பொன்முடி செயல் மகிழ்ச்சி அளிக்கிறது..! ஒரு வாரத்தில் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்- அண்ணாமலை

click me!