சட்டம் ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் எதற்குமே உதவாத 'இந்தியா' கூட்டணிக்காக நேரத்தை ஸ்டாலின் செலவிடுவதா..? ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Sep 5, 2023, 7:51 AM IST

மதுக் கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால் தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருவதாக தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், மதுக் குடித்ததை தட்டிக் கேட்டதால், பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 
 


பல்லடத்தில் 4 பேர் கொலை

பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசின் பூரண மதுக் கொள்கை காரணமாக கடந்த 28 மாத கால் தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், மதுக் குடித்ததை தட்டிக் கேட்டதால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த திரு. செந்தில்குமார் என்பவரின் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இதனை திரு. செந்தில்குமார் தட்டிக் கேட்டதன் காரணமாக, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக அறிவாளால் வெட்டிக் கொன்றதாகவும், 

துடிக்க துடிக்க கொலை

அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த திரு. செந்தில்குமாரின் உறவினர்களான திருவாளர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்தக் கும்பல் வெட்டி கொன்றுள்ளதாகவும், அந்த இடமே ரத்த ஆறுபோல் காட்சி அளிப்பதாகவும் செய்தி வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, 

25 லட்சம் ரூபாய் இழப்பீடு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.அறிவைக் கெடுத்து, அமைதியைக் குலைத்து தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் அளவற்ற தீமைகள் ஏற்படுத்தும் மதுவை ஒழிப்பதில் நாட்டு மக்களும், அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டிலோ அரசே மதுவை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம், சட்டம் ஒழுங்கை அரசே சீரழித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பற்றியோ,

எதற்குமே உதவாத இந்தியா கூட்டணி 

காவேரி நதிநீர்ப் பிரச்சனை பற்றியோ, மக்களின் அன்றாடபிரச்சனைகள் பற்றியோ கவலைப்படாமல், எதற்குமே உதவாத 'இந்தியா கூட்டணி' குறித்து நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதனைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!