அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்… கூட்டாக வேட்புமனுவை தாக்கல் செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்!!

By Narendran SFirst Published Dec 4, 2021, 12:33 PM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வேட்புமனுவை, தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக தாக்கல் செய்தனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வேட்புமனுவை, தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டாக தாக்கல் செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மாற்றப்பட்டது. மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என்றும், 8 ஆம் தேதி அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5 ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6 ஆம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இதை அடுத்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது.  அப்போது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங்  விருப்ப மனு பெற வந்தார்.

அப்போது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனு கோரினார். ஆனால் அவருக்கு வேட்புமனு மறுக்கப்பட்டது. இதனால் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போதே அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், அவரை விரட்ட தொடங்கினர். பின்னர் அவரை அதிமுக அலுவலகத்தை விட்டு வெளியில் தள்ளினார். பிறகு அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து பேசிய அவர், ஒருங்கிணைப்பாளர் பதவியை பொருத்தவரையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கு மட்டுமே வேட்புமனு என்றும், வேறு யாருக்கும் கிடையாது என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூறியதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதை அடுத்து தேர்தல் என்பது ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். விருப்பமனு கொடுக்க வந்த நபரை தாக்குவதுதான் அதிமுகவின் ஜனநாயகமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுத்தொடர்பான அதிமுக தலைமையிடம் விளக்கம் கேட்டபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் என்பதால் தனியாக வருபவர்களுக்கு வேட்பு மனு அளிக்க இயலாது என்றும், முன்மொழிய வழிமொழிய ஆட்கள் தேவை எனவும், அவர்களும் 5 ஆண்டுகள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் எனவும், வந்தவருக்கு அது இல்லாததால் வேட்பு மனு அளிக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில்,ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் கட்சியின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வந்து மனுத்தாக்கல் செய்தனர்.

click me!