
திகார் சிறையில் இருந்து வெளிவந்த தினகரன், எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார்.
அதன் காரணமாகவே, 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்களை தமது பக்கம் இழுத்து, முதல்வர் எடப்பாடிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார்.
ஆனால், தினகரன் முதல்வராவதை அமைச்சர்களில் பலரும் கொஞ்சம் கூட விரும்பவில்லை. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ க்களில் பலர், அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் கனவில் இருந்ததால், அவரையே சுற்றி, சுற்றி வந்தனர்.
அதன் பிறகு, டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பும், மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ க்களை எடப்பாடி சந்தித்ததும், தினகரனின் வேகத்தை குறைத்தன.
தினகரன், திகார் சிறையில் இருந்தவரை, பன்னீர் அணி, எடப்பாடி அணியுடன் இணைந்துவிடாமல் இருப்பதற்கான அனைத்து, தடைகளையும், தமது ஆதரவாளர்கள் மூலம் ஏற்படுத்தினார்.
ஆனால், ஜாமினில் வெளி வந்ததும், அணிகள் இணைப்பு நடக்கவில்லை, எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், மீண்டும் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார் தினகரன். அதற்கு, அமைச்சர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இரு அணிகளையும் இணைத்து, தாம் முதல்வர் ஆகிவிடுவது, பன்னீரையும், எடப்பாடியையும் துணை முதல்வர்கள் ஆக்கி விடுவது என்று ஒரு திட்டம் தீட்டினார் தினகரன்.
அவரது இந்த திட்டத்தை, அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் கனவில் மிதந்த எம்.எல்.ஏ க்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, சசிகலா குடும்பத்தினரே ஏற்றுக்கொள்ளவில்லை.
தினகரன் முதல்வராகும் திட்டம், முன்வைக்கப்பட்டதை அடுத்து, அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவையே கலைத்து விட்டார் பன்னீர்.
சசிகலா குடும்பத்தை அதிகாரபூர்வமாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தனியாக இயங்கி வரும் தாம், மீண்டும் தினகரனோடு இணைந்து அரசியல் செய்தால், மக்கள் வெறுப்பை உமிழ்வார்கள் என்று, பன்னீர் அந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
பன்னீரின் இந்த முடிவால், அந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி க்களுக்கு சற்று வருத்தம் இருந்தாலும், தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மறுபக்கம், எடப்பாடி – பன்னீர் அணிகளுக்கு இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளதை, சட்டமன்ற நடவடிக்களிலேயே அறிய முடிந்தது.
ஆகவே, தினகரன் தீவிர அரசியலில் இருக்கும் வரை, அணிகள் இணைப்புக்கு சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது. அதேபோல், அவரால் ஆட்சிக்கு எந்த வித இடையூறையும் ஏற்ப்படுத்த முடியாது.
ஒரு வேளை, அவர் ஆட்சியை கவிழ்க்க முயன்றால், அவருக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ க்களே, ஓட்டம் பிடித்து விடுவார்கள் என்பதே எடப்பாடியின் கணக்கு.