சரவெடி ஓ.பி.எஸ். அதிரடி தீபா – நெருக்கடியில் அதிமுகவினர்

First Published Feb 23, 2017, 9:52 AM IST
Highlights


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் தீபா – ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், சசிகலா தரப்பினருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அரசியல் ரீதியாக ஓ.பி.எஸ். தரப்பினர் சரவெடியாகவும், தீபா ஆதரவாளர்கள் அதிரடியாகவும்இயங்கி, சசிகலா தரப்பினரை கலக்கமடைய செய்கின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஒரே அணியாக இருந்தபோது, தனது அத்தையின் மரணத்துக்கு நியாயம் கேட்டு வெளி வந்தார் தீபா. பிப்ரவரி 24ம் தேதி, தனது முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

அதன்பின்னர், முதலமைச்சர் பிரச்சனையில் ஓ.பி.எஸ். போர்க்கொடி தூக்க ஓ.பி.எஸ். – சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிளவுப்பட்டது. இதனிடையே ஓ.பி.எஸ். – தீபா கைக்கோர்க்க சசிகலா அணியினருக்கு நெருக்கடி அதிகமானது.

முதல்வர் போட்டியில் சசிகலாவும், ஓ.பி.எஸ்.ஸும் மோதினர். இதனால் அதிருப்தியடைந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர். மக்கள் ஆதரவும், தொண்டர்கள் ஆதரவும் ஓ.பி.எஸ். -  தீபா அணியினருக்கு கிடைத்தாலும், ஆட்சி அதிகாரத்தையும், கட்சியின் தலைமையையும் தனக்கு கீழ் வைத்து கொள்ள சசிகலா முயற்சி செய்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்ல, எடப்பாடி தரப்பினர் பெரும் போராட்டத்துக்கு பின், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

கட்சியின் பொது செயலாளர் தேர்வில் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். தரப்பினர் அளித்த புகார், தலைக்குமேல் கத்தியாக சசிகலா தரப்பை வாட்டிக் கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில், பொதுமக்களிடம் நீதி கேட்டு, பிரச்சார பயணம் செல்ல இருப்பதாக ஓ.பி.எஸ். ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதேபோல் தீபாவும், தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 24ம் தேதி அறிவிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் இருவரும் இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை துவக்க உள்ளனர். ஆட்சி அமைப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதரவு அளித்ததும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையை ஏற்றதும், அதிமுக தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தங்கள் தொகுதிக்குள் செல்ல முடியாதபடி அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், போலீஸ் பாதுகாப்புடன் தொகுதிக்குள் நுழைய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

சசிகலா தரப்பினருக்கு தமிழகம் முழுவதும், ஓ.பி.எஸ். தரப்பினர் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் ரீதியாக சரிவெடியாய் நெருக்கடி தர, மறுப்புறம் தீபாவின் ஆதரவாளர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் செல்லும் இடமெல்லாம் அதிரடியாய் கருப்பு கொடி, மறியல், ஆர்ப்பாட்டம் என பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒருபுறம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சரவெடியாய் போராட்டம் நடத்த, மறுப்புறம் தீபா ஆதரவாளர்களின் அதிரடி போராட்டத்தால் சசிகலா தரப்பினர் ஆடிபோயுள்ளனர்.

click me!