
குடியரசு தலைவர் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவு என எடப்பாடி அணி, பன்னீர் அணி ஆகிய இரண்டு அணிகளுமே அறிவித்து விட்டன.
கூவத்தூர் பேரம் தொடர்பாக, சட்டமன்றத்தில் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், பன்னீர் அணியினர் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமைதியாகவே இருந்தனர்.
தினகரன் தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கி, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியதில் இருந்தே, சட்டமன்றத்தில் பன்னீர் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் எடப்பாடி அணியினர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், இன்னும் எதற்காக இழுத்துக்கொண்டு நிற்கவேண்டும், பேசாமல் இணைத்து விட்டால் என்ற முடிவுக்கு வந்த பன்னீர், கடந்த செவ்வாய் கிழமை அன்று மைத்ரேயனையும், முனுசாமியையும் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அதுகுறித்து பேசி இருக்கிறார்.
அதற்கு, சசிகலா எதிர்ப்புதான் நமது பலமே. எம்.எல்.ஏ க்கள் அவர்கள் பக்கம் அதிகமாக இருந்தாலும், மக்கள் யாரும் அவர்களை விரும்பவில்லை. மக்களின் ஆதரவு நம் பக்கமே உள்ளது என்று கூறி இருக்கிறார் மைத்ரேயன்.
மேலும், தாம் ஒரு தனியார் நிறுவனத்திடம் சர்வே எடுக்க சொல்லி இருந்தேன். அவர்களும் செய்து முடித்துள்ளனர். அந்த சர்வேபடி, குறைந்தது 40 தொகுதிகளில் இருந்து 85 தொகுதிகள் வரை நமக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக உறுதியாக தெரிய வந்துள்ளது.
நம் அணியை அவர்களுடன் இணைத்தால், நமக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். 80 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வாய்ப்பு இருக்கும்போது, நாம் ஏன் அணிகளை இணைக்க வேண்டும்.
ஆட்சி கலைந்தால் கலையட்டும். மறுபடியும் தேர்தல் வந்தால், நாம் தனித்து நின்று 40 தொகுதிகளில் ஜெயித்தாலும், எதிர் கட்சியாகவோ அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ அமரலாம். தனித்தன்மையோடு அரசியல் செய்யலாம்.
சசிகலா குடும்பத்தை எதிர்த்து இவ்வளவுநாள் பேசிவிட்டு, இப்போது அந்த அணியுடன் நாம் இணைந்தால், எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய் விடும். அத்துடன் மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் இழந்து விடுவோம்.
அதனால், அணிகள் இணைப்பு பற்றி நாம் யோசிக்க கூட வேண்டாம் என்று மைத்ரேயன் தெளிவாக எடுத்து கூறி இருக்கிறார்.
அதை ஆமோதித்த கே.பி.முனுசாமி, நாம் என்னதான் பேசி முடிவெடுத்து போனாலும், நமக்கு அங்கே மரியாதை என்பது துளி கூட இருக்காது, அதனால் அணிகள் இணைப்பு தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்.
அவர்கள் இருவரும் கூறியதை பொறுமையாக கேட்ட பன்னீர், அணிகள் இணைப்பு வேண்டாம் என்பதில் நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறீர்கள். அதனால், அதுபற்றி இனி பேச தேவை இல்லை. அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசிப்பதுதான் நல்லது என்று கூறி இருக்கிறார்.
மேலும், சட்டமன்றம் முடிந்ததும், மறுபடியும் சுற்றுப்பயணத்தை தொடங்கி, மறுபடியும் மக்களை சந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறி அவர்களை பன்னீர் அனுப்பி வைத்திருக்கிறார்.