
ஒரு பக்கம் ஆட்சியைக் கவிழ்க்க பரோலில் வந்த சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து நடத்தும் சதி, மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து தன்னை அவமதிப்பது, இதனிடையே திமுக கொடுக்கும் குடைச்சல் என நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ள ஓபிஎஸ் தனது மனக் குமுறல்களை எல்லாம் மோடியிடம் கொட்டித் தீர்த்து விட்டாராம்.
வழக்கம் போல் பிரதமரும், ஓபிஎஸ்சை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் என டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
கடந்த முறை ஓபிஎஸ் தனது பரிவாரங்களுடன் டெல்லி சென்றபோது, மோடியின் அப்பாயிண்மென்ட் கிடைக்காமல் தோல் முகத்துடன் திரும்பி வந்தார்.
ஆனால் இந்த முறை மோடியை சந்தித்தே தீருவது என்ற முடிவுடன் ஓபிஎஸ் டெல்லி கிளம்பிச் சென்றார். ஏற்கனவே ஓபிஎஸ் டெல்லி சென்றாலே இபிஎஸ் மனசும் திக், திக் என அடித்துக் கொள்ளும். அங்க போயி தனக்கு ஆப்பு எதுவும் வைத்து விடுவாரோ என்ற பயம் இபிஎஸ்சை ஆட்டிப் படைத்துவிடும்.
அதனால்தான் ஓபிஎஸ் டெல்லி செல்லும்போது, கூடவே தனது வலது கரமான அமைச்சர் தங்கமணியையும் கூடவே அனுப்பி வைத்தார்.
ஆனால் விடாக் கொண்டனான ஓபிஎஸ், தங்கமணிக்கு அல்வா கொடுத்துவிட்டு, மைத்ரேயனுடன் மோடியை தனியாகவே சந்தித்தார்.
ஓபிஎஸ் மொழிபெயர்ப்பாளரே மைத்ரேயன்தான். அங்க போயி தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகப் பேசியதை விட, அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாகத்தான் அதிகம் பேசினார்களாம். ‘
ஆட்சியைக் கவிழ்க்கிறதுக்கு என்ன வழிகள் எல்லாம் இருக்கோ அத்தனையும் தினகரன் பார்த்துட்டு இருக்காரு. போதாக்குறைக்கு இப்போ அந்தம்மா பரோல்ல வந்து, ஏதோ பிளான் பண்ணிட்டுப் போயிருக்காங்க. இவங்களை சமாளிக்கிறதே எங்களுக்குப் பெரிய வேலையா இருக்கு..’ என புகார் வாசித்ததாகச் சொல்கிறார்கள்.
அதே போல் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தன்னை கண்டுகொள்வதே இல்லை என்றும் தங்கள் அணிக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, அவருக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தது தொடர்பான வழக்கும் தங்களை அச்சுறுத்துவதாகவும் ஓபிஎஸ் புகார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்சின் புகார்கள் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மோடி, , ‘எங்களை மீறி ஆட்சியை கலைச்சிட முடியுமா? நீங்க உங்க வேலைகளை பாருங்க. நாங்க பார்த்துக்குறோம். ‘ என்று சொன்னாராம் . அதே நேரத்தில் ஓபிஎஸ் , மோடியுடன் இருக்கும்போதே , எடப்பாடியைத் தொடர்பு கொண்டு பேசியது இபிஎஸ்க்கு சற்று ஆறுதலாக இருந்ததாக சொல்கிறார்கள்.