அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனைடுத்து இந்த வழக்கு பட்டியலிட்டால் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவுப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இருந்த போதும் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்து அதிமுக பெயரையும், பதவியையும், கட்சி கொடியையும் பயன்படுத்தி வருவதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக பெயரை பயன்படுத்த தடை
அந்த மனுவில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், நான்கைந்து மாதங்களில் முக்கியமான மக்களவை தேர்தல் வரவுள்ளது, ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார், எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார், பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.
மேல்முறையீடு செய்த ஓபிஎஸ்
இதனை தொடர்ந்து நீதிபதி சதீஸ்குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது.
அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்து, எண்ணிடும் நடைமுறைகள் முடிவுற்றால் இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை (நவ.10) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுகவில் இணைவதற்க்கான கதவு மூடப்பட்டுள்ளது- ஆர்.பி.உதயகுமார் அதிரடி