கூட்டுறவு வங்கி பதவிக்காக மோதும் தந்தை – மகன் ஆதரவாளர்கள் ! மதுரையில் அடிதடி… தேர்தல் ரத்து !!

By Selvanayagam PFirst Published Jul 8, 2019, 7:45 AM IST
Highlights

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தேர்தலில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும்  அவரது மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவாளர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கூட்டுறவு துணைப் பதிவாளர் ஸ்ரீமன் முன்னிலையில், மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. 33 பேர் விண்ணப்பித்ததில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் ராஜுவின் ஆதரவாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட 21 இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்தது.தேனி மாவட்டம் வடுகப்பட்டி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவரும், ஓபிஎஸ்  ஆதரவாளருமான ராஜகுருவிற்கும், தேனி உப்பார்பட்டி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவரும் ரவீந்திரநாத்குமாரின் ஆதரவாளருமான முத்துபாலாஜிக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. 


தேர்தல் நாளான ஜூலை 2ல் யாரும் மனுத்தாக்கல் செய்யாத நிலையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதியும் துணைத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி ஸ்ரீமன் அறிவித்தார்.

அந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ராஜகுரு தரப்பினருக்கும், ரவீந்திரநாத் ஆதரவாளர் முத்து பாலாஜி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் அளித்த ராஜகுரு, ஜூலை 2 ல் நானும், என் டிரைவர் செல்வக்குமாரும் காரில் மதுரை சென்றோம். உசிலம்பட்டியை தாண்டி 4 கி.மீ.,ல் இரண்டு காரில் வந்த எட்டு பேர் காலை 9:30 மணிக்கு எங்களை மறித்து தாக்கினர். 

அவர்களிடம் தப்பி செக்கானுாரணியை தாண்டி சென்ற போதும் அதே கும்பல் மீண்டும் மறித்து கத்தியை காட்டி மிரட்டினர்.  என்னிடமிருந்த 10 ஆயிரம் பணத்தையும் பறித்தனர்.உசிலம்பட்டி அருகே நடந்த தாக்குதலை அடுத்து முன்கூட்டியே செக்கானுாரணி போலீசில் தகவல் தெரிவித்தால், செக்கானுாரணியில் எங்களை மிரட்டிய போது போலீசார் வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

மேலும் மதுரையில் வேட்புமனு பெற தேர்தல் அதிகாரி அறைக்கு சென்றபோதும் மற்றொரு கும்பல் என்னை அங்கேயே தாக்கியது. அப்போதுதான், துணை தலைவர் தேர்தலில் போட்டியிட கூடாது என என் மீது தொடர் தாக்குதல் நடத்துவது தெரிந்தது என தெரிவித்துள்ளார்.

ஆனால் முத்து பாலாஜி இதனை மறுத்துள்ளார். ராஜகுரு தாக்கப்பட்டது எனக்கு தெரியாது. மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது அவர் தாக்கப்பட்டதாக கேள்விப் பட்டேன். துணை தலைவர் பதவியை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்பதால் தாக்குதலுக்கு நான்தான் காரணம் என ராஜகுரு கூறுகிறார். இச்சம்பவத்திற்கு பின் எனது ஒன்றிய செயலர் பதவி பறிபோனது என தெரிவித்தார்..

இப்படி அப்பா – மகன் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மற்றும் தேனி மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

click me!