
சந்தப்பவாத அரசியலை நியாயப்படுத்த நம் தலைவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மந்திரம் ’அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை.” என்பதுதான். இந்த ஒன்றை சொல்லிவிட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளலாம், படு கேவலமாக திட்டி பிரிந்து செல்லலாம், பழைய அர்ச்சனையை மறந்து கட்டியணைத்து மீண்டும் இணையலாம்.
வெவ்வெறு கட்சிகளுக்குள் நட்பை உருவாக்கவே இந்த மந்திரம் கைகொடுக்குமென்றால், ஒரே கட்சிக்குள் நேர்ந்த பிளவை மூடி சரிசெய்திட இது உதவிடாதா என்ன? ஆம் அந்த நம்பிக்கையில்தான் பன்னீர் _ தினகரன் இணைப்புக்கு தூபம் போட துவங்கியுள்ளனர் சிலர்!...
உண்மைதான்! தில்லி திகாரிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு சென்று ஆலோசனை நடத்திவிட்டு மீண்டும் சென்னைக்கு தினகரன் வருவதற்குள் அ.தி.மு.க.வினுள் நடந்த தடாலடி பரபரப்புகளையும், ஆவேச அர்ச்சனைகளையும், அதிரடி சபதங்களையும் சற்றே மனக்கண்ணில் ரீவைண்ட் செய்து பாருங்கள்.
இதில் எங்குமே பன்னீர் டீமின் இடைச்செருகலோ, பழனி அணி மற்றும் தினகரன் பற்றிய விமர்சனங்களோ எதுவுமே இல்லை.
தினகரன் கூட ஓ.பி.எஸ்.ஸை தனது வழக்கமான நயமான வார்த்தைகளில் கூட விமர்சிக்கவில்லை. ஆனால் எடப்பாடி அணியை தேன் தடவிய வார்த்தைகளில் போட்டுத்தாக்கினார். ’அமைச்சர்கள் என்னை கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று பயத்தினால் சொன்னார்கள். அந்த பயம் அவர்களின் சுயநலம் சம்பந்தப்பட்டது. எதனால் பயந்தார்கள் என்பதை பின்னர் தெரிவிப்பேன்.’ என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றி உண்மையை போட்டுடைத்தார்.
ஆக ‘அம்மாவின் ஆட்சியை தொடர்வதே எங்கள் நோக்கம். தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களின் தலையீடு எள் அளவும் இல்லாமல் ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறோம்.’ என்று ஜெயக்குமார் எகிறி குதிப்பதெல்லாம் வெற்று அரசியலே, என்னை உள்ளே நுழைய விடாததற்கு காரணம் பதவி, அதிகாரம், பண குவிப்பு எல்லாமே பறிபோய்விடுமோ என்கிற அவர்களது பயமே என்று தெளிவாக போட்டுத்தாளித்துவிட்டார் தினகரன். அவரின் ’சுயநல பயம்’ என்கிற ஸ்டேட்மெண்ட் மூலம் அமைச்சர்களின் முகமூடி கிழிந்துவிட்டதாகவே மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் பேசுகிறார்கள்.
இந்நிலையில்தான் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்ளாத தினகரன் மற்றும் பன்னீர் தரப்புகளுக்கு இடையில் சமரசம் செய்து வைக்கும் மூவ்களை சில லாபிகள் தொடங்கியுள்ளன. இரு அணிகளும் இணைந்து, கட்சி ஒன்றாக வலுப்பட வேண்டுமென்பதுதான் தினகரனின் நோக்கம். கட்சி வளர்ச்சிக்காக பன்னீரும், பழனியும் இணைய வேண்டும் என்று நினைப்பவர், தான் பழசை மறந்து பன்னீரை அரவணைக்க நிச்சயம் தயங்கமாட்டார் என்பதே இந்த லாபிகள் வைக்கும் லாஜிக் விளக்கம்.
தன்னையும் சசிகலாவையும் மிக வெளிப்படையாக விமர்சித்து கட்சிக்கும், ஆட்சிக்கும் இவர்க்ளோடு எந்த தொடர்புமில்லை என்று சொல்லி ஓட ஓட விரட்டும் அமைச்சர்களையே ‘சகோதரர்கள், நிச்சயம் உண்மையை உணர்வார்கள், திரும்பி வருவார்கள், திருந்தி வருவார்கள்.’ என்று புன்னகை முகம் கொண்டே விமர்சிக்கும் தினகரன், தன் மீது பர்ஷனல் அட்டாக் எதையும் வைக்காத பன்னீரை நிச்சயம் ஏற்பார் என்று அடித்துச் சொல்கிறது இணைப்புக்கு முயற்சிக்கும் டீம்.
டி.டி.வி.யுடன் ஓ.பி.எஸ். இணைப்பு பற்றி பன்னீர் தரப்பிலும் பிட்டை போட்டுப் பார்த்துவிட்டது இந்த டீம். மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி, ஆக்ரோஷ ரியாக்ஷன் எதுவும் அங்கிருந்து வரவில்லையாம். தனக்கு அரசியல் அடையாளம் தந்தவர், தன்னை அம்மாவின் முன் நிறுத்தியவர், தான் கற்பனையும் செய்திடாத முதல்வர் பதவியையே பெற பின்புலமாய் இருந்தவர் என்று தினகரனை இப்போதும் நன்றியுடந்தான் நினைவு கூறுகிறார் பன்னீர்.
அன்றுபோல் இன்றும் ‘எம்.பி. சார்.’ என்றுதான் தினகரனை விளிக்கிறாராம் பன்னீர். தினகரன் எம்.பி.யாக இருந்தபோது அவரின் பின்னே இந்த வார்த்தையை கூறியபடிதான் ஓடிக்கொண்டும், ஒட்டிக் கொண்டும் இருப்பார் பன்னீர். அந்த விசுவாச வார்த்தையில் எந்த மாற்றமுமில்லையாம். எனவே இந்த இணைப்புக்கு பன்னீரிடமிருந்து பாஸிடீவ் பதில் வரவே வாய்ப்பு அதிகமென்று நம்புகிறது சமாதான தூது கோஷ்டி.
தானும், தன் சகாக்களும் வகிக்க வேண்டிய பதவிகளை எடப்பாடி அணி சுகிப்பது மட்டுமில்லாமல், ஜெயக்குமார் போன்றோர்களின் வழியாக மிக மோசமான விமர்சனங்களுக்கு தாங்கள் உள்ளாக்கப்படுவதில் பன்னீருக்கும் தாங்கொண்ணா மனக்கஷ்டம் இருக்கிறது. அந்த டீமுக்கு ரிவிட் வைக்க வேண்டுமென்றால் அது இப்போதைக்கு தினகரன் மூலமாகதான் சாத்தியம் என்கிற யதார்த்தத்தையும் பன்னீர் புரிந்திருக்கிறார். எனவே தினகரனோடு கைகோர்க்க அவரது டீம் நிச்சயம் தயங்காது என்கிறார்கள். முணுசாமி மட்டுமே முரண்டு காட்டுவார் ஆனால் அது காரிய முரண்டு என்பதால், லாபக்கணக்கை காட்டி அவரையும் சரி செய்துவிடுவார்கள் என்கிறார்கள்.
ஆனால் தினகரனோடு இணைவதில் பன்னீருக்கு ஒரேயொரு சிக்கல்தான். அது டெல்லி பற்றிய பயமே. நிச்சயம் வளர்ந்துவிடுவார், கட்சியையும் தொண்டர்களையும் வளைத்துவிடுவார் என்பதால் தினகரனை தமிழக அரசியலில் சகித்துக் கொள்ளவே முடியாத டெல்லி லாபியை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதுதான் பன்னீர் முன்னே நிற்கும் ஒரே சவால்.
ஆனால் அதற்கும் கைகொடுக்க சமாதான தூதுவர்கள் தயாரே. ‘தமிழகத்தில் அரசியல் மற்றும் ஆட்சி ரீதியாக கால் பதிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஏறும் அ.தி.மு.க. குதிரை செல்வாக்கு மிகுந்ததாக இருக்க வேண்டும். எடப்பாடி அணியின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் மட்டுமே அவர்களை சகிக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். இல்லையென்றால் எப்போதோ மாவட்டத்துக்கு மாவட்டம் கலகம் வெடித்திருக்கும்.
ஆனால் அவர்களுக்கு தினகரன் மீது பெரும் நம்பிக்கையும், அபிமானமும் இருக்கிறது. வெற்றி, லாபம் இவையே அரசியலின் இலக்காக இருக்கையில் அதற்கு நீங்கள் தினகரனை சகித்தால் என்ன, எடப்பாடி அண்ட்கோவை சகித்தாலென்ன?’ என்று லாஜிக்கான கேள்விகளை டெல்லி லாபிக்கான தமிழக பிரதிநிதிகள் முன் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும் இதை யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆக இன்னும் சில நாட்களில் அ.தி.மு.க.வின் கூடாரங்களில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றே தெரிகிறது. தினகரன் கொடுத்திருக்கும் 60 நாட்கள் அவகாசத்திற்குள் ஒரு மெகா மாயம் நிகழ்ந்து ஜெயக்குமார் உள்ளிட்டோர் அலறுமளவுக்கு விஸ்வரூபங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது என்று ட்விட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆனால் அது உடனடியாக நடந்துவிடாது, சில வாரங்கள் ஆகும் வாய்ப்பிருக்கிறது என்றும் இழுக்கிறார்கள்.
ஓ மை காட்! ’தினகரனும், பன்னீரும் இணையுறாங்களா?’ என்று இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமேயில்லை. காரணம்? இது சிம்ப்ளி அரசியல்.