வெள்ள நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் அளிக்கவும், நிவாரண உதவிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை முடுக்கிவிடவும், மத்திய அரசு நிர்ணயித்துள்ளதைக் காட்டிலும் இழப்பீட்டினை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு
தென் மாவட்ட மழை பாதிப்பு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வானிலை மையம் தனது 14-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டின் மூன்றாவது பக்கத்தில் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் தென் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என்று ஏற்கெனவே கணித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, 16-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டின் முதல் பக்கத்தில் தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 16 முதல் 18 தேதி வரை ஆங்காங்கே கனமழை பெய்யும் என்றும், டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவித்திருந்தது. 17-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டில் இதனை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டிருந்தது.
வானிலை மையம் எச்சரிக்கை
இதையெல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், 17-12-2023 தேதியிட்ட இந்திய வானிலை மையத்தின் செய்திக் குறிப்பை மட்டும் மேற்கோள்காட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 17-12-2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியிருந்தது தி.மு.க. அரசின் திறமையின்மைக்கும், அக்கறையின்மைக்கும், மெத்தனப்போக்கிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதாவது, மழை பெய்யத் துவங்கிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்! இயற்கையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும் என்பதையும், அடிக்கடி மாறக்கூடியது என்பதையும் புரிந்து கொள்ளாமல், இந்திய வானிலை மையத்தின்மீது பழி சுமத்தியுள்ளது அறியாமையின் உச்சகட்டம்.
நிவராண பணிகளை மேற்கொள்ளவில்லை
14-12-2023 நாளைய இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கமாட்டார்கள். தி.மு.க. அரசின் காலந்தாழ்ந்த நடவடிக்கை காரணமாக, மீட்புப் பணிகளையே மேற்கொள்ள முடியாத அளவுக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தள்ளப்பட்டார்கள். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு உணவுப் பொருட்கள்கூட வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. பின்னர் மழை ஓரளவுக்கு நின்ற பிறகு, பயணிகள் பல கிலோமீட்டர் நடந்து சென்ற நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அவர்களுக்கு உணவு அளித்துள்ளனர்.
நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிடுக
தி.மு.க. அரசின் திறமையின்மையை மூடி மறைக்க இந்திய வானிலை மையத்தின்மீது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பழிபோட்டுள்ளது அவரது அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய வானிலை மையத்தின்மீது வீண் பழி போடுவதை நிறுத்திக் கொண்டு, இனி வருங்காலங்களிலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவும், வெள்ள நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் அளிக்கவும், நிவாரண உதவிகள் மற்றும் மறுவாழ்வுப்பணிகளை முடுக்கிவிடவும், மத்திய அரசு நிர்ணயித்துள்ளதைக் காட்டிலும் இழப்பீட்டினை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் படியுங்கள்