மத்தியில் அடுத்தது யார் ஆட்சி..? மோடியை வீட்டுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

By Asianet TamilFirst Published May 9, 2019, 8:13 AM IST
Highlights

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் செயல்பட இந்த இந்தக் கூட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. எதிர்பார்ப்பதுபோல பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போகும்பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் அக்கட்சி கருதுகிறது.

மே 23-க்கு பிறகு ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளை எதிக்கட்சிகள் தொடங்கியுள்ளன. அதன் முக்கிய நகர்வாக பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்க இறுதிகட்ட தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகள் கூடி பேச திட்டமிட்டுள்ளன. 
 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு மட்டுமே பாக்கியுள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நம்பிக்கையில் பாஜக உள்ளது. இதேபோல இந்த முறை பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில் உள்ளன.


இதற்கிடையே மே 23-க்கு பிறகு ஆட்சி அமைக்கும் பணிகளையும் பாஜக ஆட்சி அமைவதை தடுக்கும் பணிகளையும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன. பாஜக - காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைய டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மாநில கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசத் தொடங்கியிருக்கிறார்.


இந்நிலையில் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பாஜக அல்லாத ஆட்சி அமைப்பதற்கான பணியைத் தொடங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுலை டெல்லியில் சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. இந்தச் சந்திப்பின்போது தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சியமைப்பது குறித்து ராகுலுடன் சந்திரபாபு ஆலோசித்தார். இன்று மேற்கு வங்கம் செல்லும் சந்திரபாபு, மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனையத்து வட இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பாஜக அல்லாத ஆட்சி அமைய சந்திரபாபு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தனிப் பெரும்பான்மையைப் பெறாது என எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில்  தனிப்பெரும் கட்சியாக பாஜக இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். ராகுல் - சந்திரபாபு சந்திப்பின்போது பாஜக மீண்டும் ஆட்சியமைக்காமல் தடுப்பது பற்றியே விவாதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
1996-ம் ஆண்டுக்குப் பிறகு மெஜாரிட்டி இல்லையென்றாலும் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்கும் வழக்கத்தைக் குடியரசுத் தலைவர்கள் பின்பற்றிவருகிறார்கள். 1998-ல் மட்டும் விதிவிலக்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதமும் மெஜாரிட்டி  இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகே ஆட்சியமைக்க வாஜ்பாய்க்கு அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அழைப்பு விடுத்தார். 
இந்த முறையும் 1998-ம் ஆண்டைபோலவே ஆட்சியமைக்க வாய்ப்பளிக்க அழைப்பு விடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்த ராகுல் - சந்திரபாபு சந்திப்பின்போது முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் விதமாக அனைத்து கட்சிகளுடனான சந்திப்புக்கு ராகுலும் சந்திரபாபு நாயுடுவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். மே 19 இறுதி கட்டத் தேர்தல் முடிவுற்ற பிறகு மே 21 அன்று காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
அதோடு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் செயல்பட இந்த இந்தக் கூட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது. எதிர்பார்ப்பதுபோல பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போகும்பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் அக்கட்சி கருதுகிறது.

click me!