இந்திக்கு எதிர்ப்பு.. ஏ.ஆர். ரஹ்மானுக்கு மதரீதியாக நெருக்கடி கொடுத்தால்... சீமான் கடும் எச்சரிக்கை.!

By manimegalai aFirst Published Apr 14, 2022, 9:13 AM IST
Highlights

ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ண் ஓட்டத்தையே ஏ.ஆர்.ரஹ்மான் தனது கருத்துக்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறிய கருத்துக்கு பதிலுரைக்கும் விதமாக தமிழை இணைப்பு மொழியாக கோரியதை தான் வழிமொழிகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

அமித்ஷாவுக்கு எதிர்ப்பு

இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும் அலுவல் மொழியாக இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அமித்ஷாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார். அதில், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரிகள் இடம் பெற்றிருருந்தன.

சீமான் ஆதரவு

இதுதொடர்பாக  ரஹ்மானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு எதிராக பாஜகவினரும் வலதுசாரிகளும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதேபோல ரஹ்மானுக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டனர். இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தித்திணிப்புக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!.

தமிழ்தான் ஆட்சி மொழி

ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ண் ஓட்டத்தையே ஏ.ஆர்.ரஹ்மான் தனது கருத்துக்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறிய கருத்துக்கு பதிலுரைக்கும் விதமாக தமிழை இணைப்பு மொழியாக கோரியதை தான் வழிமொழிகிறேன். இந்தியாவின் மூத்த மொழியாகவும், உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்கும் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என காயிதே மில்லத் தொடங்கி பலர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த நிலையில், இந்தியைப் புகுத்த துடிக்கும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். 

ரஹ்மான் தமிழின் அடையாளம்

தமிழின் மீது மாறாப் பற்று கொண்டு திகழும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து என்பது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல, அது தாய்த் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வின் பிரதிபலிப்பு. ஏ.ஆர்.ரஹ்மான் தனிப்பட்ட நபரல்ல, உலகெங்கும் வேர் பரப்பி வாழும் தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்” என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

click me!